Published : 27 Aug 2021 03:13 PM
Last Updated : 27 Aug 2021 03:13 PM
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் நிச்சயம் உறுதுணையாக இருப்பார், மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைப்பெற மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஆக. 27)ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது, ‘‘சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் முதல் முறையாக தமிழில் உரையாற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக ஆளுநர் உரையில் வழக்கத்தைவிட 15-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 15 குறள்களை கூறி உரையாற்றியுள்ளார். இதனை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆளுநர் ஒரு மருத்துவர் என்பதால் கரோனா தொற்று பரவாமல் இருக்க என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்.
கரோனா மக்களுக்கு உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை கொடுக்கக்கூடிய தொற்றாக இருக்கிறது. இது புதுச்சேரி மாநிலத்தில் மேலும் பரவாமல் இருக்க வேண்டும். புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதில் ஆளுநருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆகவே தான் தடுப்பூசி போடுவதை வெகுவிரைவில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அதேபோன்று நம்முடைய புதுச்சேரி மாநிலம் எவ்வாறு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
புதுச்சேரி மக்களின் நலனில் அக்கறைக்கொண்டு, அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அரசு கொண்டு செல்லும்போது, அதற்கு தாராளமாக அனுமதி வழங்குவதில் மிகுந்த கவனத்துடன் ஆர்வம் காட்டுகிறார். உண்மையிலேயே இதுபோன்ற ஒரு நல்ல துணைநிலை ஆளுநர் கிடைத்திருப்பது நமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்கட்சி தலைவர் பேசும்போது மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை வாங்கி புதுச்சேரி வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்றார். இந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைப்பெற மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.
நம்முடைய அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி அதிக நிதி பெறுவதில் கவனமாக இருக்கின்றனர். சட்டப்பேரவை தலைவர் கூட அதிக அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆதலால் தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைப் பெறும். கூடுதலான நிதி கிடைக்கும்போது அதிக திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த முடியும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது யாரால், எப்போது என்பது எதிர்கட்சித் தலைவருக்கு தெரியும். பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அவை தற்போது மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. அதனை வெளிப்படையாக சொல்லவும் விரும்பவில்லை.
அவற்றை எவ்வாறு கொண்டுவர முடியும் என்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளோம். உடனே கொண்டுவர முடியுமா என்று தெரியவில்லை. கூட்டுறவு நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையும், தெம்பும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் 2 மாத ஊதியம் கொடுப்போம் என்று அறிவித்துள்ளோம். புதுச்சேரி மாநிலத்தின் மீது மத்திய அரசுக்கு அதிக அக்கறை உண்டு. நிச்சயமாக மத்திய அரசு நமக்கு நிறைய உதவி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் நிர்வாக சீர்கேடு, குழப்பங்கள், யாருக்கு அதிகாரம் என்ற சண்டைகள் எல்லாம் இருந்தது. தற்போது அதிலிருந்து தெளிந்து வந்துள்ளோம். ஆதலால் இந்த தெளிவில் எதிர்காலத்தில் புதுச்சேரி மாநிலத்தை சிறந்த மாநிலமாக உருவாக்குவதற்கான நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொன்னதுபோல் எந்தெந்த துறைகளில், என்னென்ன பணிகள் முடங்கியுள்ளது, எந்தெந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் நிச்சயம் உறுதுணையாக இருப்பார்.
உறுப்பினர்களின் கருத்துக்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்துக்கொண்டு முழுமையாக புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டுவர நடவடிக்கையை எடுக்கும்.’’ இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT