Published : 27 Aug 2021 02:31 PM
Last Updated : 27 Aug 2021 02:31 PM
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
‘‘முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான எந்தவிதமான புதிய திட்டமும், விளக்கமும் இல்லை.
ரங்கசாமி முன்பு முதல்வராக இருந்போது ரூ.5,500 கோடி பட்ஜெட் தாக்கல் செய்தார். காங்கிரஸ்-திமுக ஆட்சியில் அதனை ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்த்தினோம். அதில் 94 சதவீதம் நிதியை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்தோம்.
ரங்கசாமி விவசாயக்கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். விவசாயிகள் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக வாங்கிய கடன் ரத்து செய்யப்படுமா? என தெளிவான விளக்கம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வாங்கிய கடனை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனின் பெருந்தொகையை செலுத்திவிட்டனர். குறைந்த அளவில் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு விவசாயக்கடனை ரத்து செய்வதற்கு ரூ.22 கோடி செலவு செய்துள்ளோம். எனவே இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததில்லை.
இந்த பட்ஜெட்டில் எந்த சிறப்பு அம்சங்களும் இல்லை. தற்போதைய அரசு கரோனாவை கட்டுப்படுத்த புதிய திட்டமும், நிதி ஆதாரமும் குறிப்பிடவில்லை. கரோனா 3-வது அலை வர வாய்ப்பு உள்ள இந்த நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவை வாங்குவதற்கு தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டில் மருத்துவத்துறையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தை ஊக்குவிக்க எதுவும் அறிவிப்பு இல்லை. எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து அறிவிப்பு இல்லை. மேம்பாலம், சாலைகள், குடிநீர் திட்டத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவையில் ரங்கசாமி சமர்ப்பித்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.’’
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT