Published : 27 Aug 2021 01:21 PM
Last Updated : 27 Aug 2021 01:21 PM
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் இன்று பதவியேற்றார்.
தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமி ராகவன் - அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.
1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன், விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட முக்கியமான பதவி இது. ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப் பதவியிலிருந்தபடிதான் தமிழகத்தில் கட்சியை வளர்த்தார் கணேசன்.
பாஜக செயற்குழு உறுப்பினராக 31 ஆண்டுகளாக இருந்த கணேசன், இடையில் தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினரானார்.
இந்நிலையில், இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று விமானம் மூலம் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலுக்குச் சென்றார் இல.கணேசன். இன்று (ஆக. 27) மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, அம்மாநிலத் தலைமை நீதிபதி ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில், மணிப்பூர் மாநில முதல்வர் பிரண் சிங், எதிர்க்கட்சித் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT