Published : 27 Aug 2021 12:29 PM
Last Updated : 27 Aug 2021 12:29 PM
இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 27) சட்டப்பேரவை விதி எண்-110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது:
"1983-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3,4,269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்துள்ளனர். இவர்களில், 18,944 குடும்பங்களைச் சேர்ந்த 58,822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 13,540 குடும்பங்களைச் சேர்ந்த 34,087 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்து வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உதவி செய்யும். இதற்காக அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
இலங்கைத் தமிழர் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் 7,469 வீடுகள், 231 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். இதில், முதல் கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் 108 கோடியே 81 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்களில் உள்ள மின்வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளைச் செய்துதர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT