Published : 27 Aug 2021 11:02 AM
Last Updated : 27 Aug 2021 11:02 AM

உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சுந்தரேஷ்: ராமதாஸ் வாழ்த்து

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சுந்தரேஷுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 27) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷ் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு நீதிபதி உச்ச நீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு பெற்றுச் சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் 9 நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் மத்திய அரசு நியமித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் பணியாற்றி வந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷும் ஒருவர் ஆவார்.

ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மனவருத்தம் கொண்டிருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நீதிபதி சுந்தரேஷின் நியமனம் மிகுந்த மனநிறைவை அளித்திருக்கிறது.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு அனைத்து வகைகளிலும் தகுதியானவர். 23-வது வயதில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட அவர், 29-வது வயதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்.

விசாரணைகளின்போது அவர் முன்வைத்த துல்லியமான வாதங்கள் பல தருணங்களில் நீதிபதிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் சிறப்பாக வழக்குகளை நடத்திய அவர், 2009-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்துள்ள நீதிபதி சுந்தரேஷ், மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ஏராளமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்; அவற்றில் பல முன்மாதிரி தீர்ப்புகள் ஆகும்.

'காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்' என்ற திருக்குறளுக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையானவராகவும், வழக்குதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கடுஞ்சொல் உரைக்காதவராகவும் திகழ்பவர். இறுதி நம்பிக்கையாக நீதிமன்றங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். சமூக நீதியில் மிகுந்த அக்கறை கொண்டவர். தமிழ் மொழிப் புலமை கொண்டவர்; விவசாயத்தின் மீது பற்று கொண்டவர்; நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அவர் வழங்கும் தீர்ப்புகளில் இந்த அம்சங்கள் சாதகமான வழிகளில் எதிரொலிக்கும். மொத்தத்தில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மக்களின் நீதிபதியாவார்.

ஒப்பீட்டளவில் இளம் வயதில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் எம்.எம்.சுந்தரேஷ், 6 ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் நீடிப்பார். உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதி என்ற நிலைக்கு அவர் உயரக்கூடும். உச்ச நீதிமன்ற நீதிபதியாக எம்.எம்.சுந்தரேஷ், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்குவார்; அவரது பணி சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x