Published : 27 Aug 2021 10:13 AM
Last Updated : 27 Aug 2021 10:13 AM

கலைஞர் நினைவு நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்; அதிமுகவின் துரோகம் வீழும்:  சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை - நத்தம் சாலையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில் மரங்களை அகற்றி வேறு இடத்தில் நடுவதற்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி | உள் படம்: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைப்பதில் அதிமுக செய்யும் துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள் என மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் நம்பிகை தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியாவை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அவர் வசித்தார் என்று சொல்லுவது ஏதாவது பொருத்தப்பாடு உடையதா? கற்பனைக்கும் எட்டாத பொய் அல்லவா?" என்று அவர் வினவியுள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் , எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ, மாற்றவோக் கூடாது என்று அஇஅதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழக சட்டப்பேரவையிலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ பேசினார்.

அப்பொழுது குறுக்கிட்டு பேசிய தமிழக முதல்வர் “அந்த கட்டிடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். நாங்கள் அதனை பரிசீலிக்கிறோம். அதை விடுத்து ஆதாரமில்லாமல் தவறான பிரச்சாரத்தை செய்யாதீர்கள்” என்று கூறினார்.

இப்பொழுது வரை செல்லூர் ராஜுவோ அவரது கட்சியோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களால் எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியாது. ஏனென்றால் அதில் துளியும் உண்மையில்லை.

பென்னிகுயிக்கின் வாழ்வையும், முல்லை பெரியாறு அணை உருவான விதத்தையும் பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டு, அதனை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதியுள்ள எழுத்தாளன் என்ற முறையில் இரண்டு கருத்துகளை பதிவு செய்கிறேன்.

1. கர்னல் பென்னிகுயிக் மதுரையில் வாழ்ந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை எந்த ஒரு ஆய்வாளராலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நூலையோ, ஆவணத்தையோ அதிமுக வெளியிட வேண்டும்.

2. 1895 ஆம் ஆண்டு அணை கட்டும் பணி முடிவுற்ற அடுத்த ஆண்டே பென்னிகுயிக் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்புகிறார். மனைவி மற்றும் ஐந்து பெண் குழந்தைகளுடன் இங்கிலாந்து திரும்பும் அவருக்கு சென்னை கிரிக்கெட் கிளப்பின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டு வழியனுப்பப்படுகிறது. ஏனென்றால் பென்னிகுயிக் சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.

1896 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசிக்கத் துவங்கிய பென்னிகுயிக் ராயல் இந்தியன் பொறியியற் கல்லூரியின் தலைவராகிறார். மூன்றாண்டுகளுக்குப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிறார்.
பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கை கையாள்வதற்கான ஆலோசனை பெறுவதற்காக அழைக்கப்படுகிறார்.

ஆஸ்திரேலியா சென்று மீண்டும் இங்கிலாந்து திரும்பும் அவர் 1911 ஆம் ஆண்டு கேம்பெர்லி நகரில் மரணமடைகிறார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்.

அவர் இந்தியாவை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அவர் வசித்தார் என்று சொல்லுவது ஏதாவது பொருத்தப்பாடு உடையதா? கற்பனைக்கும் எட்டாத பொய் அல்லவா?

இடர்மிகு சூழலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்து லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாமனிதனாகப் போற்றப்படும் பென்னிகுயிக் அவர்களின் புகழை குறுகிய அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்துவது என்ன நியாயம்?

மதுரைக்கும், தென் தமிழகத்து மாணவர்களுக்கும் மிகப்பெரும் பயன்பாட்டினை அளிக்கும் நூலகத்தை பொய்யைச்சொல்லி தடுக்க நினைப்பது என்ன வகை அரசியல்?

மூன்று ஆண்டுகளுக்கு முன் சட்ட மன்றத்தில் அதிமுக அரசு கல்வி மானியக் கோரிக்கையின் போது மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் 6 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைப்போம் என்று அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு காற்றோடு போயிற்று. எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை.

ஆனால் இன்றோ 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த கையோடு அதனை நடைமுறைப்படுத்த துரிதமான ஆய்வினை பல முறை மேற்கொண்டு இடத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு.

அன்று நூலகத்தை அமைக்காமல் மதுரைக்கு துரோகம் செய்த அதிமுக, இப்பொழுதோ அமையவிருக்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்கு செய்ய நினைக்கிறது.

துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x