Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேஇயக்கப்படும் மலை ரயிலுக்கு, முதல்முறையாக உள்நாட்டு தயாரிப்பில் நிலக்கரியால் இயங்கக்கூடிய நீராவி இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்பட்டுவரும் நீராவி மலை ரயில் சேவை, 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இந்த நீராவி ரயில் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது. மலைரயிலில் பயணிக்கும்போது, உதகையின் இயற்கை எழிலையும், வன விலங்குகளையும், மலைமுகடுகளையும் கண்டு ரசிக்க முடியும். இதனால், இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டுவர்.
இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக ரூ.8.50 கோடி மதிப்பில் நிலக்கரியால் எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்படும் இன்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வேபணிமனையில் தயாரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ரயில் இன்ஜின் தயாரிப்பு பணிகள் தற்போது நிறைவுற்றுள்ள நிலையில், அதில்கோளாறுகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டன. இதையடுத்து இந்த இன்ஜின்,பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பயன்பாட்டுக்காக மேட்டுப்பாளையம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மலை ரயில்பொறியாளர்கள் கூறும்போது, “புராதனத்தை பறைசாற்றும் வகையிலும், அதே நேரத்தில்தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்பவும்இந்த நீராவி இன்ஜின் ‘எக்ஸ் 37400’உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக மணிக்கு 10 முதல் 11 கி.மீ வேகத்தில் ஓடும். இந்த இன்ஜினில் 3,600 பாகங்கள் உள்ளன. அதில் 1,400 பாகங்கள் பொன்மலை ரயில்வே பணிமனையிலும், மீதமுள்ள பாகங்கள் தமிழகத்தின் கோவை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாங்கி வரப்பட்டு, முற்றிலும் இந்திய தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில், 4 ஆயிரத்து 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. 3.5 டன் எடைகொண்ட நிலக்கரியை எரிபொருளாக எடுத்துச் செல்ல முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு” என்றனர்.
நீலகிரி மலை ரயில் அறக்கட்டளைநிறுவனர் நடராஜ் கூறும்போது, “மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்குநீராவி இன்ஜின் மூலமாக மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தரமற்ற நிலக்கரியால் இன்ஜின்களின் உந்துசக்தி குறைந்து, அடிக்கடி பழுது ஏற்பட்டது.
பாதி வழியிலேயே ரயில் நின்றுவிடுவதால், ஃபர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் இன்ஜின்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருச்சி ரயில்வே பணிமனையில் புதிய நீராவி இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுகாரணமாக, மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதியளித்தால், புதிய நீராவி இன்ஜினுடன் மலை ரயில் இயக்கப்படும் என தெரிகிறது. நீராவி இன்ஜினுடன் மலை ரயிலின் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT