Last Updated : 26 Aug, 2021 07:49 PM

 

Published : 26 Aug 2021 07:49 PM
Last Updated : 26 Aug 2021 07:49 PM

புதுச்சேரி பட்ஜெட்; ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, எண்ணெய், தானிய வகைகள் விற்பனை: முதல்வர் உறுதி

புதுச்சேரி

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, எண்ணெய் மற்றும் தானிய வகைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, கோரிமேட்டில் தொற்றுநோய் சிகிச்சைகளுக்கு 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமியின் அறிவிப்புகள்:

'' * விவசாயிகள் நிதி உதவி பெற விவசாய இடுபொருள்களின் கையிருப்பு, வானிலை நிலவரங்களை அறிய கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் நவீன வேளாண் விளைபொருள் விற்பனை வளாகம் அமைக்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்டப்படும். நடப்பு நிதியாண்டில் வேளாண்துறைக்கு ரூ.124.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

* 75-வது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் 75 செங்குத்துத் தோட்டம் அமைக்கப்படும். புதுச்சேரியில் 100 ஏக்கர் பரப்பில் விலங்கியல் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். விவசாயிகளுக்கு 10 ஆயிரம் தேக்கு, செம்மரம் மற்றும் சந்தன மரக்கன்றுகள் இலவசமாகத் தர உத்தேசித்துள்ளோம்.

* நேரடி பணப் பட்டுவாடா முறையால் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் பருப்பு, எண்ணெய் மற்றும் தானிய வகைகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். இலவச அரிசி தர ரூ.197.6 கோடி ஒதுக்கியுள்ளோம். கூட்டுறவு நிறுவனங்களுக்கு நடப்பாண்டு பத்து விழுக்காடு நிதியை உயர்த்தித் தர உத்தேசித்துள்ளோம். பால்கோவா உற்பத்தி செய்யும் ஆலையை ரூ.1.67 கோடியில் பாகூரில் அமைக்க உத்தேசித்துள்ளோம். பாண்லே பால் பொருட்கள் தயாரிக்கும் பிரிவு ரூ.2.5 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும்.

* புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி நிலுவைத் தொகைக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். ஆலையைத் தொடர்ந்து நடத்த சாத்தியக்கூறு ஆராயப்படும்.

* வீடுகளில் 30 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி பேனல்கள் நிறுவும் திட்டம் 40 சதவீத மத்திய நிதி உதவியுடன் நடப்பாண்டு நடைமுறைப்படுத்தப்படும். மரப் பாலத்தில் ரூ. 26.25 கோடியில் புதிய வாயு காப்பு துணைமின் நிலையம் அமைக்க உத்தேசித்துள்ளோம். புதுச்சேரியிலுள்ள 33,870 தெரு மின்விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும்.

* தீயணைப்புத்துறை பயிற்சியாளர்களுக்கு நிரந்தரப் பயிற்சி மையம் அமைக்கப்படும். புதிய தீயணைப்பு நிலையங்கள் தவளக்குப்பம், கரையாம்புத்தூர், லிங்காரெட்டிபாளையம், திருமலைராயன்பட்டினம் பகுதிகளில் அமைக்க உத்தேசித்துள்ளோம். நுரையூர்த்தி வாகனங்களை வில்லியனூர், மடுகரை, சுரக்குடி, மாஹே, ஏனாம் பகுதி தீயணைப்பு நிலையங்களுக்கு வாங்கவுள்ளோம். புதுச்சேரி தீயணைப்புத்துறை தலைமை அலுவலகம் மற்றும் புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அமைக்கப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

* மீன்பிடித் தடைக்காலங்களில் மீனவக் குடும்பங்களுக்கு தரப்படும் தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடித் தடைக்காலங்களில் இரும்பு, மரவிசைப் படகு, கண்ணாடி நுண்ணிழை பிளாஸ்டிக் படகு பராமரிப்புத் தொகை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படும்.

* புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவருக்கும் சிறந்த சிகிச்சை அளிக்க அனைவருக்கான முழு சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை உருவாக்க உள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க பட்ஜெட்டில் தரப்படும் உதவிக்கொடை 10 சதவீதம் உயர்த்தித் தரப்பட்டுள்ளது.

*புதுச்சேரி கோரிமேட்டில் தொற்றுநோய் சிகிச்சைகளுக்கு 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.

*வில்லியனூர், ஏனாமில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடப்பாண்டு முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கரோனா சிகிச்சைக்கு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 795.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x