Published : 26 Aug 2021 07:23 PM
Last Updated : 26 Aug 2021 07:23 PM
கையகப்படுத்தப்படும் கோயில் நிலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டத் தடை விதிக்கக் கோரியும், அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக.26) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒப்பந்ததாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தபோது, சுற்றுச்சூழல் மற்றும் நகரமைப்பு திட்ட அனுமதி பெறவில்லை என்றும், தற்போது அனுமதி பெற்றுள்ளதால் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், அதிகாரிகள் நிர்ணயிக்கும் இழப்பீடு தொகை கோயிலுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ஏற்கெனவே நிலத்தை மதிப்பீடு செய்த மதிப்பீட்டாளர் முறையாக மதிப்பீடு செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கோயில் நிலத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தால், 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும், குத்தகைக்கு எடுப்பதாக இருந்தால் அப்போதைக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் குந்தகைத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
அன்றைய தினம் நிலத்தை மதிப்பீடு செய்ய 4 அல்லது 6 தகுதி பெற்ற மதிப்பீட்டாளர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என மனுதாரர் நரசிம்மனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT