Published : 26 Aug 2021 07:02 PM
Last Updated : 26 Aug 2021 07:02 PM
புதுச்சேரியில் ரூ.9,924.41 கோடிக்கு வரியில்லா பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான ரங்கசாமி தாக்கல் செய்தார்.
அப்போது புதுச்சேரியின் மொத்த நிலுவைக் கடன்தொகை ரூ.9,334.78 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் கடன் மற்றும் வட்டி செலுத்த ரூ.1,715 கோடியை ஒதுக்கீடு செய்ய உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைந்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவர் நிதியமைச்சராகவும் உள்ளார். ஆட்சி அமைத்து முதல் பட்ஜெட்டை இன்று மாலை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:
"புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையில் எனது முதல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பது மகிழ்ச்சி தருகிறது. தேர்தலில் எனக்கு முழு மனதுடன் ஆதரவு அளித்த பிரதமர் மோடி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி. பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும், தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும் எனது அரசு கடினமாகப் பாடுபடும். அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும், நலிவடைந்தோரின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
பதவியேற்றவுடன் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆயிரம் பேரைப் புதிதாகச் சேர்த்தோம். ஓய்வூதியத்தை ரூ.500 உயர்த்தித் தந்தோம். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம் அளித்தோம்.
2021-22ஆம் ஆண்டு வரவு செலவு மதிப்பீடு ரூ. 9,924.41 கோடி. சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.6,190 கோடியாகவும், மாநில பேரிடர் நிவாரண நிதியான ரூ.5 கோடியைச் சேர்த்து மத்திய அரசின் நிதி உதவி ரூ.1,729.77 கோடியாக இருக்கும். மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.320.23 கோடியாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.1,684.41 கோடியை வெளிச்சந்தை மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதித்துள்ளது. ரூ.1,200.44 கோடி மூலதன செலவினங்களுக்காகவும், ரூ.8,723.97 கோடி வருவாய் செலவினங்களுக்காவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் 31 வரை மொத்த நிலுவைக் கடன் தொகை ரூ. 9,334.78 கோடி. இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 22.17 சதவீதம். பரிந்துரைக்கப்பட்ட நிதி நிலை குறியீட்டு வரம்புக்குள் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு மொத்த வருவாய் (ஜிடிபி) 10 சதவீதம்.
கடந்த 2020-21 நிதியாண்டில் நமது செலவு ரூ.8,342.87 கோடி. இது 2020-21 திருத்திய மதிப்பீட்டின் படி 92.7 சதவீதம். கரோனா வைரஸ் பரவல் மற்றும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் தரப்படும் நிதி மத்திய அரசிடம் இருந்து சில திட்டங்களுக்குக் கடந்த நிதியாண்டு இறுதியில் பெறப்பட்டதால் 64.13 சதவீதம் மட்டுமே மத்திய அரசு திட்டங்களில் செலவிட முடிந்தது. கடந்த நிதியாண்டில் மத்திய அரசுத் திட்டங்களின் கீழ் செலவிட முடியாத மீதமுள்ள தொகை அந்தந்தத் திட்டங்களின் கீழ் நடப்பாண்டில் செலவிடப்படும்.
2021-22 பட்ஜெட் மதிப்பீடான 9,924.41 கோடியில் ரூ.2,140 கோடி ஊதியத்துக்கும் (21.56 சதவீதம்), ரூ.1,050 கோடி ஓய்வூதியத்துக்கும் (10.58 சதவீதம்), ரூ.1,715 கோடி கடன் மற்றும் வட்டி செலுத்த (17.28 சதவீதம்), ரூ.1,591 கோடி மின்சாரம் வாங்கவும் (16.03 சதவீதம்) ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு ரூ.1,290 கோடியும் (13 சதவீதம்), அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடையாக ரூ.1,243 கோடியும் (12.52 சதவீதம்) ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT