Published : 26 Aug 2021 02:15 PM
Last Updated : 26 Aug 2021 02:15 PM
ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே, திமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் மீது குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அதிமுக உறுப்பினரும் உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகத் தெரிவித்து உரையாற்றினார்.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை வைத்தார். ஆனால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற செய்தியைச் சொன்னார். அதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளிக் கல்வித்துறைக்கும், உயர் கல்வித்துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர். தமிழகம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியவர். இதன் மூலம் கல்வி கற்போரின் எண்ணிக்கையையும் உயர்த்தினார். அதனாலேயே நாட்டில் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
தேர்தலே காரணம்
ஜெயலலிதாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத்தான் விழுப்புரத்தில் அவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆளுநரும் அதற்கு அனுமதி வழங்கினார். பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். சிண்டிகேட் உறுப்பினரும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல்கலைக்கழகத்தை முழுமையாக நிறுவ முடியாத சூழல் உண்டானது.
ஆனால், புதிய திமுக அரசில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடராது, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று முதல்வரும் உயர் கல்வித்துறை அமைச்சரும் தெரிவித்தனர். அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். இதற்கு நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே அவர்கள் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்திருக்கிறார்கள்''.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT