Published : 25 Aug 2021 07:26 PM
Last Updated : 25 Aug 2021 07:26 PM
கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர்த் திருட்டைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, வெள்ளகோவில் பிஏபி கடைமடைப் பகுதி விவசாயிகள் இன்று திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், கடைமடைப் பகுதிக்குச் சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
காங்கயம் வட்டம், வெள்ளகோவில் பிஏபி 1 மற்றும் 3-ம் மண்டல பாசனப் பரப்பில், 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 1993 விதிகளின் படி, 7 நாள் அடைப்பு 7 நாள் திறப்பு என்ற முறையில் பாசனம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாகக் கடைமடை பாசனத்துக்கு சரிவரத் தண்ணீர் வருவதில்லை. தலைமடைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தென்னை மட்டை தொழிற்சாலைக்குக் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் திருடப்படுகிறது.
அதேபோல் பிஎம்சி (பரம்பிக்குளம் பிரதான கால்வாய்) வாய்க்கால் அருகில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் 2 கோடி, 3 கோடி லிட்டர் தண்ணீர்க் குளங்களை வெட்டி, பாலித்தீன் கவரைப் போட்டு தேக்கி வைத்துக்கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக விவசாயிகள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட பிஏபி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஆட்சியர் சு.வினீத்திடம் நேரில் மனு அளித்தனர். அந்த மனுவில், ''பிஏபி கடைமடை விவசாயிகளுக்கு முறையாகத் தண்ணீர் கிடைப்பதில்லை. வணிகப் பயன்பாட்டு ஆயக்கட்டு பகுதிகளை நீக்க வேண்டும். தண்ணீர்த் திருட்டைத் தடுத்தாலே, கடைமடைப் பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைக்கும். அதேபோல் கோழிப்பண்ணை அதிபர்கள், தென்னை மட்டை அதிபர்கள் தங்களது ஆலைகளுக்குத் தண்ணீர் திருடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோல கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் திருடப்படுகிறது.
நிலத்தடி நீர் பாதிப்பு
தென்னை மட்டை அதிபர்கள் தண்ணீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே நிலத்தில் விடுவதால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர்த் திருட்டில் ஈடுபடுபவர்களின் மின் இணைப்பைத் துண்டித்து, குழாய் உள்ளிட்டவற்றைத் தொடர்ச்சியாகப் பறிமுதல் செய்தால் மட்டுமே, 7 நாள் அடைப்பு மற்றும் 7 நாள் திறப்பு எனக் கடைமடைக்கு, பிஏபி தண்ணீர் கிடைக்கும். இதனைத் தொய்வின்றித் தொடர்ச்சியாக அதிகாரிகள் செய்ய வேண்டும். வட்டமலை, உப்பாறு அணைகளுக்குத் தண்ணீர் கொண்டுவந்தால் அதனை நம்பி உள்ள பல ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்'' என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT