Last Updated : 25 Aug, 2021 03:10 PM

2  

Published : 25 Aug 2021 03:10 PM
Last Updated : 25 Aug 2021 03:10 PM

கிருபானந்த வாரியார் பிறந்த நாள்: அரசு விழாவாகக் கொண்டாட்டம்

காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள வாரியார் சுவாமிக்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மரியாதை செலுத்தினார்.

காட்பாடி

கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவரது உருவப் படத்துக்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் பகுதியில் 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தார். இவர் தனது 8 வயதில் கவிபாடும் ஆற்றலைப் பெற்றார். தனது 12-வது வயதில் பதினாறாயிரம் பண்களைக் கற்று 18-வது வயதில் சொற்பொழிவாற்றும் திறன் பெற்றார். தனியாக புராணப் பிரசங்கங்களைச் செய்யத் தொடங்கினார். இவருடை பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கையொட்டி அமைந்ததால் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்தன. மேலும், பாமர மக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகளையும் வாரியார் சுவாமிகள் எழுதியுள்ளார். தவிர 150 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

சிறந்த முருக பக்தரான கிருபானந்த வாரியார், தினந்தோறும் பல்வேறு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துவதையே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், பேச்சுத் திறன், எழுத்துத் திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்ற வாரியார் "அருள்மொழி அரசு", "திருப்புகழ் ஜோதி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

வாரியார் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி லண்டனில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு நவம்பர் 7-ம் தேதி இந்தியா திரும்பும்போது காலமானார். சொந்த ஊரான காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியாருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு மண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாக இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து, வாரியார் சுவாமியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x