நடிகர் விவேக்: கோப்புப்படம்
நடிகர் விவேக்: கோப்புப்படம்

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகார்: விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Published on

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது.

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சி அடையவைத்தது. இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அவர் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை இன்று (ஆக.25) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், "கரோனா தடுப்பூசியை யார் யார் செலுத்திக்கொள்ள வேண்டும், யாருக்குச் செலுத்தக்கூடாது என்பதை மத்திய, மாநில அரசுகள் வரையறுக்கவில்லை. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்த தெளிவான விளக்கமும் வெளியிடவில்லை.

இதனால்தான் கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அளித்தேன். (Case No. 1987/22/13/2021) அதன் படி ஆணையம் புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நடிகர் விவேக்கின் மரணத்தை முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முன் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளேன்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in