Published : 25 Aug 2021 03:15 AM
Last Updated : 25 Aug 2021 03:15 AM

காங்கயம் அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல் வழக்கில் மேலும் இருவர் கைது: ரூ.40 லட்சம் பறிமுதல்

திருப்பூர்

காங்கயம் அரிசி ஆலை அதிபர்மகன் ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் நேற்று மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே காடையூரைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர் ஈஸ்வரமூர்த்தி. இவரின் மகன் சிவபிரதீப்பை (22), கடந்த 22-ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, போலீஸார் எனக் கூறி கடத்திச் சென்றது.

இதையடுத்து, அவரது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த கும்பல், மகனை உயிருடன் விட ரூ.3 கோடி கேட்டு பேரம் பேசியது. இதில் பதற்றமடைந்த ஈஸ்வரமூர்த்தி, கடத்தல் கும்பல் கேட்ட ரூ.3 கோடியை, திண்டுக்கல் மாவட்டம் பழநி சாலையில் வைத்து கொடுத்து மகனை மீட்டார்.

இதுதொடர்பாக, காங்கயம் காவல்நிலையத்தில் ஈஸ்வரமூர்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சக்திவேல் (37), அகஸ்டின் (45), பாலாஜி (38) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும், பசீர் (32) என்பவரை கிருஷ்ணகிரியில் வைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.20 லட்சத்து 44 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி, பழநியில் கைது

இந்த வழக்கில் மேலும் மூவரைதேடி வருவதாக போலீஸார் தெரிவித்திருந்த நிலையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த சையதுஅகமதுல்லா(48) என்பவரை கிருஷ்ணகிரியில் நேற்று கைது செய்தனர்.

இந்த கும்பலைச் சேர்ந்த ஜாபர் சாதிக் (40), பாலன் ஆகியோர் மதுரையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் அங்கு முகாமிட்டிருந்தனர். அங்கிருந்து ஜாபர் சாதிக் என்பவர் தப்பினார். இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே வைத்து தனிப்படை போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர்.

ஜாபர் சாதிக் அதே பகுதியிலுள்ள கீரனூரை சேர்ந்தவர். அவரிடமிருந்து சுமார் ரூ.40 லட்சத்தை கைப்பற்றியதாக போலீஸார் தெரிவித்தனர். பாலன்என்பவரை பிடிக்க மதுரையில்தனிப்படையினர் முகாமிட்டுள்ளதாக, மாவட்ட போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x