Published : 24 Aug 2021 09:22 PM
Last Updated : 24 Aug 2021 09:22 PM
பட்ஜெட் தொகையில் ரூ.200 கோடி குறைத்து ஒப்புதல் கொடுத்திருப்பதன் மூலம் ரங்கசாமி ஆட்சியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று(ஆக. 24) கூறியதாவது:‘‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டிலுள்ள ரூ. 6 லட்சம் கோடி பொதுச் சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்க்கும் மிகப்பெரிய தேசவிரோத திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
அதில் விமான நிலைங்கள், ரயில்வேதுறை, தொலைபேசி துறை, மின்விநியோகம், நிலக்கரி சுரங்கங்கள் என லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுக்கின்ற நிறுவனங்களை எல்லாம் தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்து, அதன் மூலம் நாட்டை திவாலுக்குகின்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
அரசின் பொதுவுடைமை சொத்துக்களை தனியாரிடம் கொடுத்துவிட்டு, நாட்டில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான நடவடிக்கையை மோடி அரசு செய்து வருகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கும். இவற்றை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.
புதுச்சேரி மாநில பட்ஜெட் வரும் 26-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அரசு வைத்த கோரிக்கை ஒன்றைக்கூட மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ரங்கசாமி வைத்த கோரிக்கையான மாநில அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை மத்திய உள்துறையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இரு கட்சிகளும் புதுச்சேரி மாநிலத்தை மத்திய நிதிக்கமிஷனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 41 சதவீதம் மானியம் மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எழுதிய கடிதம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எங்களது ஆட்சியில் 2020-21-ம் ஆண்டுக்கு ரூ.100 கோடி மானியம் அதிகமாக பெற்றோம். 2021-22க்கு ரங்கசாமி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மத்திய அரசு அதிகப்படியாக உயர்த்திக் கொடுத்த மானியம் ரூ.24 கோடி தான்.
தேர்தல் சமையத்தில் புதுச்சேரியில் பாஜகவுடன் இணைந்த அரசு வந்தால் நிறைய நிதி கிடைக்கும், வேலை வாய்ப்பு கிடைக்கும், மூடியுள்ள பஞ்சாலைகள் திறக்கப்படும். ரூ.8 ஆயிரம் கோடி கடன் ரத்து செய்வார்கள் எனத் தேர்தலின்போது பட்டியலிட்டனர். ஆனால் முதல் பட்ஜெட்டிலேயே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட்டும் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட ரூ.10,100 தொகையில் ரூ.200 கோடி குறைத்து, ரூ.9,900 கோடிக்கு மட்டும் ஒப்புதல் கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன. இதில் இருந்து மத்திய பாஜக அரசு காங்கிரஸ் ஆட்சியில் எப்படி புறக்கணித்ததோ, அதே போன்று ரங்கசாமி ஆட்சியையும் புறக்கணிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
கிரண்பேடியால் ஒப்புதல் கொடுக்கப்படாமல் நிறுத்தி வைத்த கோப்புக்கு, இப்போது இருக்கின்ற ஆளுநர் ஒப்புதல் கொடுத்து ஏற்கனவே நாங்கள் ஒதுக்கி வைத்திருந்த நிதியை, தற்போது இவர்கள் கொடுத்து, தாங்கள் செய்ததாக மார்த்தட்டிக்கொள்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் வேலை. பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைப் பார்ப்போம்.
எந்த ஆட்சி இருந்தாலும் மத்தியிலுள்ள மோடி அரசு புதுச்சேரியை புறக்கணிக்கிறது என்பது தெளிவாகிறது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி வந்த பிறகு கட் அவுட் கலாச்சாரம் தலைத் தூக்கியுள்ளது. முதல்வரின் பிறந்தநாளின்போது பேனர் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் இருந்து தொடர் கதையாகியுள்ளது. இதனால் மக்கள் அவதியுறுகின்றனர்.
புதுச்சேரியில் பேனர் கலாச்சாரத்தை ஒழித்தால் மட்டும் தான் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆகவே புதுச்சேரியில் பேனர் கலாச்சாரத்தை முழுமையாக தடுக்க வேண்டும். பேனர் தடை சட்டத்தை முதல்வர் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கரோனா 3-வது அலை குழைந்தைகளை தாக்கும் என்று கூறுகின்றனர். புதுச்சேரி அரசு கரோனா விதிமுறைகளை மக்கள் கடுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சுகாதார மையங்களிலும் குழந்தைகளுக்கு என்று தனி வார்டுகளை உருவாக்க வேண்டும். தேவையான மருத்துவர்கள், செவிலிர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் 3வது அலையை குறைக்க முடியும்.’’இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT