Published : 24 Aug 2021 05:28 PM
Last Updated : 24 Aug 2021 05:28 PM
பாவாணரின் அண்ணன் மகன் வழிப்பேத்திக்கு உரிய உதவி வழங்கப்படும் என்று ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ள நிலையில், பாவாணரின் நேரடிக் கொள்ளுப் பேரன் இறந்த தனது தந்தையின் வாரிசு வேலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது.
பாவாணரின் வாரிசுகள்
கீழடி போன்ற தொல்லியல் ஆய்வுகள் எல்லாம் தொடங்கப்படாத காலத்திலேயே, 'இந்திய மொழிகளிலேயே மூத்தமொழி தமிழ்' என்பதைத் தன்னுடைய வேர்ச்சொல் ஆராய்ச்சியின் மூலம் நிறுவியதுடன், 'இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்தே எழுதத் தொடங்க வேண்டும்' என்று வலியுறுத்தியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். அவரது அண்ணன் குருபாதம் வழிப் பேத்தி ரச்சேல் ஜெமிம்மா (75) வறுமையால் கையேந்தும் நிலையில் இருப்பது குறித்து தமிழ் ஆர்வலர் ராஜகோபால், கடந்த 22-ம் தேதி முகநூலில் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அது வைரலானதைத் தொடர்ந்து ஆட்சி மொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரை நேரில் வரச்சொல்லி குறைகளைக் கேட்டறிந்ததுடன், அரசு சார்பில் உதவிகள் செய்வதாக வாக்குறுதியும் அளித்தார்.
பாவாணரின் அண்ணன் வழிப் பேத்தியின் வறுமை நிலையைக் கண்டே தமிழக அரசு இவ்வளவுப் பரிதாபப்படுகிற சூழலில், பாவாணரின் நேரடி வாரிசுகளில் ஒருவரே வறுமையில் வாடிக்கொண்டிருக்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
பாவாணரின் மூத்த மகன் அழகியமணவாளதாசனின் மகனும், கிராம நிர்வாக அலுவலருமான மேசியாதாஸ் கடந்த 2000-ம் ஆண்டு இறந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி சண்முககனி என்ற மேரி 20 ஆண்டுகளாக வாரிசு வேலை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போது தனக்கு வயதாகிவிட்டதால், தன்னுடைய மூத்த மகன் அருள்ராஜுக்காவது வேலையைக் கொடுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாநகரை ஒட்டியுள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில் வசிக்கும் அவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "அவுக (மேசியாதாஸ்) 2000-ல் இறந்தாக. அப்ப பையங்க ரெண்டு பேரும் சின்ன பையங்க. ஒருத்தன் ஆறு படிச்சிட்டு இருந்தான். இன்னொருத்தன் ஏழு படிச்சான். குடும்பமே ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனோம். நான் பிஎஸ்சி பி.எட். படிச்சிருந்ததால வாரிசு வேலைக்காக ஓட்டப்பிடாரம் தாலுகா ஆபீஸுக்கும், தூத்துக்குடி கலெக்டர் ஆபீஸுக்கும் அலையா அலைஞ்சேன். வேலை கிடைக்கல.
இப்படியே 20 வருஷம் ஓடிப்போச்சு. அதனால என் பையனுக்காவது அந்த வாரிசு வேலையைக் கொடுங்கன்னு முந்தைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைச் சந்திச்சு மனு கொடுத்தோம். ஆட்சி மாறிடுச்சு. ஆனா, எங்க கோரிக்கை மட்டும் இன்னும் நிறைவேறல" என்றார்.
அவரது மகன் அருள்ராஜிடம் பேசியபோது, "பாவாணரின் முதல் மனைவியான எஸ்தருக்கு ஒரே ஒரு மகன்தான். அவர்தான் அழகியமணவாளதாசன். அவருக்கு 4 மகள், 3 மகன்கள். அதில், 2-வது பிள்ளைதான் என்னுடைய அப்பா, மேசியாதாஸ். அவருக்கு 2 குழந்தைகள். நானும் என் தம்பி மனோரஞ்சித்தும். அப்பா விஏஓவாக இருந்து 2000-ம் ஆண்டு மஞ்சள் காமாலையால் இறந்தார். வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்த அம்மா, 3 ஆண்டுகள் தொடர்ந்து முயன்றும் வேலை கிடைக்கவில்லை. அப்பா இறந்தப்ப அம்மாவுக்குக் கொஞ்ச வயசு என்பதால், மற்ற ஆண்களின் பார்வைக்குப் பயந்து அரசு அலுவலகங்களுக்குப் போவதையே குறைத்துக்கொண்டார். சர்ச், பிரேயர் என்றே வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்.
அப்பா இறந்தபோது எனக்கு 14 வயதுதான். எனவே, நான் பிளஸ் 2 முடித்த பிறகு வாரிசு வேலைக்கான முயற்சிகளைத் தொடங்கினேன். ஒரு அரசு ஊழியர் இறந்தால், 3 ஆண்டுகளுக்குள் அவரது வாரிசுகளில் ஒருவர் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பிக்கலாம். அம்மாவுக்கு வேலை கிடைக்காததால், நான் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டார்கள். எல்லாவற்றையும் கொடுத்தேன். கடைசியில், உங்கள் தாயாரின் வாரிசு வேலை கோரும் விண்ணப்பம் இன்னும் நிலுவையில் இருப்பதால், உங்களுக்கு வேலை வழங்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். என் தம்பியை எங்கள் அத்தையும், தாய்மாமாவும் சேர்ந்து படிக்க வைத்ததால் அவர் திருமணமாகி நல்ல நிலையில் இருக்கிறார். எனக்குச் சரியான வேலையோ, வருமானமோ இல்லாததால் இன்னும் திருமணமாகவில்லை.
அம்மாவுடன் வசிக்கிறேன். எனக்கு வாரிசு வேலை கிடைத்தால், நன்றாக இருக்கும் என்று அம்மாவும், நானும் முந்தைய வருவாய்த்துறை அமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தோம். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்குப் போங்க, நாங்க சொல்லிவிடுகிறோம் என்று அமைச்சரின் உதவியாளர் சொன்னார். மறுநாள் திங்கட்கிழமை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் சென்றேன். 15 வருடம் வரையிலான கோப்புதான் எங்களிடம் இருக்கிறது. அப்பா இறந்து 20 வருடமாகிவிட்டதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மீண்டும் அமைச்சரைப் போய்ப் பாருங்கள். அவங்க ஒரு ஜிஓ பாஸ் பண்ணுவாங்க. அது இருந்தால் மட்டும்தான் வேலை கிடைக்கும். எங்களால எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
அதற்குள் தேர்தல் என்று வந்துவிட்டதால் அமைச்சரைப் பார்க்க முடியவில்லை. இப்போது ஆட்சி மாறிவிட்டது. கலைஞர்தான் எங்கள் அத்தை பரிபூரணத்துக்குப் பாவாணர் நினைவு மண்டபப் பொறுப்பாளர் பணி கொடுத்தார். அவரது மகன் ஸ்டாலின், ஆண்டுதோறும் பாவாணர் பெயரில் தமிழக அரசின் உயரிய விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்திற்கும் உரிய வழிகாட்டுவார் முதல்வர் என்று மலைபோல் நம்புகிறோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் முதல்வரையும், ஆட்சி மொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் நேரில் சந்தித்து முறையிடக் காத்திருக்கிறோம்”.
இவ்வாறு அருள்ராஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT