Last Updated : 24 Aug, 2021 04:38 PM

 

Published : 24 Aug 2021 04:38 PM
Last Updated : 24 Aug 2021 04:38 PM

ஒரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகள்: 155 ஆண்டுகள் பழமையான நகராட்சி தரம் உயர்வு

கும்பகோணம்

155 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியான நிலையில், கும்பகோணத்தில் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவு வருவாயை ஈட்டித் தரக்கூடிய நகரமாகும். காவிரி - அரசலாறுகளுக்கு இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம் 1866-ம் ஆண்டு முதல் நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நகரில் 2011-ம் ஆண்டு கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டுகளில் வசித்து வருகின்றனர். 1866-ம் ஆண்டு மூன்றாம் நிலையாகவும், 1949 -லிருந்து முதல் நிலையாகவும், 1974-லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 முதல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 நடுநிலைப் பள்ளிகளும் 13 தொடக்கப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் மூன்று மருத்துவமனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டிலிருந்து புதை சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

கும்பகோணம் நகரம் வரலாற்றுச் சிறப்புகளையும், பல அறிஞர் பெருமக்கள் வாழ்ந்த பெருமையையும் கொண்டது. கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் கணிதமேதை சீனிவாச ராமானுஜன், யானையடி தொடக்கப் பள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் படித்தனர்.

கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் எனக் கடந்த 2013-ம் ஆண்டே நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஒரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகள்

தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014-ம் ஆண்டு முதல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது நகராட்சியாக இருந்த கும்பகோணமும் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒரே மாவட்டத்தில் இரு மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாக உருவாகும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கொண்டாட்டம்

கும்பகோணத்தை மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் போராடி வந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்று இன்று திமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன் ஆகியோரது தலைமையில் திமுகவினர் உச்சிபிள்ளையார் கோயில் அருகே பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பு வரவேற்பு

இதுகுறித்துக் குடந்தை அனைத்து வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணன் கூறுகையில், ''பாரம்பரிய, கலாச்சார, தொன்மை வாய்ந்த நகரமான கும்பகோணத்தை மாவட்டத் தலைநகரமாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். தற்போது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். விரைவில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x