Published : 24 Aug 2021 04:11 PM
Last Updated : 24 Aug 2021 04:11 PM
கோயில் சொத்துகளின் வருவாய் கோயில் நலனுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர், வைகுண்டபதி கோயில் சொத்துகளைப் பாதுகாக்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அறநிலையத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ''கோயில் சொத்துகளை அடையாளம் கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2020 செப்டம்பர் 30 வரை 42,674 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழு அறநிலையத்துறைக்குச் சொந்தமான 38,655 கோயில்களில் 10,586 கோயில் சொத்துகளை அடையாளம் கண்டுள்ளது.
இந்தச் சொத்துகள் தொடர்பாக ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வாடகை, குத்தகைப் பணம் செலுத்தாமல் இருந்த 41,664 குத்தகைதாரர், வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து 13,660 பேர் வாடகை, குத்தகை பாக்கியைச் செலுத்தினர். இன்னும் வாடகை, குத்தகை பாக்கி செலுத்தாவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ் நிலம் டேட்டாபேஸில் உள்ள வருவாய்த்துறை நிலங்களுடன் கோயில் நிலப் பதிவேடுகளை ஒப்பிட்டுப் பார்க்குமாறு கோயில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 66 சதவீத கோயில் சொத்துகள் வருவாய் ஆவணங்களுடன் ஒத்துப்போகின்றன. மீதமுள்ள 34 சதவீத நிலங்களை வருவாய் ஆவணங்களுடன் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக வருவாய்த் துறையில் கோயில் அதிகாரிகள் 10,585 மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. கோயில் சொத்துகள் விவரங்களைக் கோயில் இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது'' என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
''தமிழ் நிலம் டேட்டாபேஸில் உள்ள தகவலின் அடிப்படையில் வருவாய் ஆவணங்களுடன் கோயில் நிலப் பதிவேட்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் கோயில்களுக்குச் சொந்தமாக 5.17 லட்சம் ஏக்கர் அசையா சொத்துகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் 39 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் உள்ளது.
கோயில்களில் தினமும் பூஜைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகப் பலர் நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்தச் சொத்துகள் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்களின் வருவாய் கோயில் நலனுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கோயில்கள் பழமையான கலாச்சாரத்தின் அடையாளம் மட்டும் அல்ல, கலை, அறிவியல், கலாச்சாரம், ஆன்மிக அறிவுகளின் களஞ்சியமாகவும் உள்ளன. கோயில் சொத்துகளை முறையாகப் பராமரித்து வருவாயைப் பெருக்கி, அவற்றைக் கோயில் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். கோயில் சொத்துகளை மீட்க இரு குழுக்கள் அமைப்பதுடன், கோயில் சொத்துகளின் விவரங்களைக் கோயில் இணையதளத்தில் பதிவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT