Published : 24 Aug 2021 03:50 PM
Last Updated : 24 Aug 2021 03:50 PM
தமிழகத்தில் 29 புதிய நகராட்சிகள் உருவாக்கப்படும் என, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
"2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது.
எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நகர்ப்புறத் தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்தப் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன.
புதிய நகராட்சிகள்:
பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும். மேலும், புஞ்சை புகளூர் மற்றும் TNPL புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும்.
அவ்வாறு தரம் உயர்த்தப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும்போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படுகின்ற ஊராட்சிகளில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்படுகின்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளிலேயே தொடர்வார்கள்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பதவிக் காலம் முடிவடைகின்றபோது இணைக்கப்படும் பகுதிகள் புதிதாக உருவாக்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் நகராட்சி அல்லது மாநகராட்சியின் முழுமையான ஆளுமைக்கு உட்படுத்தப்படும்".
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT