Published : 24 Aug 2021 03:36 PM
Last Updated : 24 Aug 2021 03:36 PM

தமிழகத்தில் 6 புதிய மாநகராட்சிகள்; தாம்பரமும் மாநகராட்சியாகத் தரம் உயர்வு: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தமிழகத்தில் 6 உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. இதில், தாம்பரமும் அடங்கும். இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

"2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது.

எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

அமைச்சர் கே.என்.நேரு: கோப்புப்படம்

தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்தப் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன.

புதிய மாநகராட்சிகள்

1. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

விரிவாக்கம்

2. திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும்".

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x