Last Updated : 24 Aug, 2021 02:35 PM

 

Published : 24 Aug 2021 02:35 PM
Last Updated : 24 Aug 2021 02:35 PM

வாகனத்துக்கு 3-வது நபருக்கான காப்பீடு இல்லாததால் விபத்து இழப்பீட்டை வாகன உரிமையாளரே செலுத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

இருசக்கர வாகனத்துக்கு மூன்றாவது நபருக்கான விபத்துக் காப்பீடு நடைமுறையில் இல்லாததால் விபத்து இழப்பீட்டை வாகன உரிமையாளரே செலுத்த வேண்டும் எனக் கோவையில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராஜேந்திரன் (40). இவர் தனது இருச்கர வாகனத்தில் நரசிம்மாபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூர் செல்லும் பிரதான சாலையில் 2017-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி சென்றுகொண்டிருந்தபோது, எதிரே கோவை நரசீபுரத்தைச் சேர்ந்த ஏ.அஸ்வின் (26), சேலம்பாரக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த என்.ஈஸ்வரமூர்த்தி (24) ஆகியோர் அதிவேகமாக ஓட்டிவந்த ராயல் என்ஃபீல்டு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ராஜேந்திரனின் வலது கால் முட்டி, முட்டிக்கு மேல் உள்ள எலும்பு முறிந்து, உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டன.

விபத்து நடந்த காலத்தில் விவசாயக் கூலி வேலை செய்து, ராஜேந்திரன் மாதம் ரூ.15 ஆயிரம் வருமானம் ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில், விபத்தால் வருவாய் இழப்பும், பழைய நிலையில் வேலை செய்ய இயலாத நிலையும் ஏற்பட்டது. எனவே, தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் ராஜேந்திரன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, "எதிர்மனுதாரரின் கவனக்குறைவு, அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டுள்ளது. மனுதாரரை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவருக்கு 20 சதவீத ஊனம் ஏற்பட்டுள்ளதாகச் சான்றளித்துள்ளனர்.

எனவே மனுதாரரின் வலி, வேதனை, மருத்துவச் செலவு, வருவாய் இழப்பு, ஊனத்துக்கான இழப்பு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.3.55 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் எதிர்மனுதாரர்கள் அளிக்க வேண்டும். விபத்து நடந்த நாளில் வாகனத்தின் மூன்றாவது நபருக்கான விபத்துக் காப்பீடு நடைமுறையில் இல்லை. வாகன ஓட்டுநருக்கான ஓட்டுநர் உரிமம் இல்லை. எனவே, மனுதாருக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டை எதிர்மனுதாரர்கள் ஏ.அஸ்வின், என்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x