Published : 24 Aug 2021 02:29 PM
Last Updated : 24 Aug 2021 02:29 PM
இன்றைக்கு ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று (ஆக. 24) ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையம் மற்றும் ரூ.2 கோடி செலவில் தன்னார்வ அமைப்புகளால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தியைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிகமான அளவுக்கு 15,87,454 ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனைகளைச் செய்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையங்களை அமைக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், உடனடியாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இம்மருத்துவ நல்வாழ்வு மையங்களில் கரோனாவுக்குப் பிறகு நோய்த் தன்மை உள்ளவர்கள் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தமிழகத்திலேயே முதன்முதலில் இம்மருத்துவமனையில்தான் கரும்பூஞ்சை சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 4,200 பேர் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அதில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் 1,714 உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து இல்லம் சென்றுள்ளனர். இன்றைக்கும் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு 207 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவுக்குப் பிந்தைய மருத்துவ சேவையையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சிறப்பாகச் செய்திருக்கிறது. கரோனாவுக்குப் பிந்தைய மற்ற பொது நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு, சுணக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வர் மருத்துவத் துறைக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொதுவான நோய்களுக்கான அனைத்துத் துறைகளிலும் மருத்துவ சேவையை மிகச் சிறப்பாக ஆற்றி வருகிறார்கள்.
தடுப்பூசி போடும் பணியை நேற்றைக்கு முன்தினம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக 24 மணி நேரமும் தடுப்பூசி போடுகிற பணியைத் தொடங்கி வைத்தோம்.
எல்லா நேரங்களிலும், எல்லா வகைகளிலும், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் சொன்னதற்கேற்ப, நேற்றைக்குத் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பொது மருத்துவமனைகள் போன்றவற்றில் 55 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தத் தடுப்பூசி சேவையும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தடுப்பூசி போடும் பணியில் கோவாக்சின் அல்லது கோவிஷீல்ட் எதுவாக இருந்தாலும், அத்தடுப்பூசி செலுத்தும் பணியும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 2,87,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் நேற்றைக்கு மட்டும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,88,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அது இன்றைக்கு 5 லட்சத்தைக் கடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கையிருப்பில் 8 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. மத்திய அரசிடமிருந்து இன்று பிற்பகல் 5 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளன. இன்றைக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கும் என்ற நம்பிக்கையோடு இம்மருத்துவப் பயணம் தொடர்கிறது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT