Published : 27 Jun 2014 01:24 PM
Last Updated : 27 Jun 2014 01:24 PM
தமிழக ஆளுநராக இருக்கும் கே.ரோசய்யாவுக்கு கர்நாடக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுபோல் மிசோரம் ஆளுநராக இருக்கும் பி.புருஷோத்தமனுக்கு திரிபுரா ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக ஆளுநர் எச்.பரத்வாஜ், திரிபுரா ஆளுநர் தேவானந்த் கொன்வார் ஆகியோரின் பதவிக் காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 28) முடிவடைகிறது. இதை யொட்டி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா - கர்நாடக ஆளு நராகவும், மிசோரம் ஆளுநர் வாக் கோம் பி.புருஷோத்தமன் - திரிபுரா ஆளுநராகவும் கூடு தல் பொறுப் பாக கவனிப்பார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
கர்நாடக ஆளுநராக இருக்கும் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் (77) கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி அப்பதவியில் நியமிக் கப்பட்டார். தொடர்ந்து பலமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பரத்வாஜ், 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக இருந்தார். திரிபுரா ஆளுநராக இருந்து ஓய்வுபெறும் தேவானந்த் கொன்வார் (71), குவாஹாட்டியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி யாற்றியவர். இளைஞர் காங்கிரஸ் மூலம் அரசியலுக்கு வந்தவர். அசாம் மாநில முன்னாள் அமைச் சரான கொன்வார், முதலில் பிஹார் ஆளுநராக பதவியில் அமர்த்தப்பட்டார். மார்ச் 21, 2013-க்கு பிறகு திரிபுராவுக்கு மாற்றப்பட்டார்.
மேகாலயா ஆளுநருக்கும் கூடுதல் பொறுப்பு
இதற்கு முன் நாகாலாந்து ஆளுநர் அஸ்வினிகுமார் தனது பதவியை கடந்த புதன்கிழமை ராஜினாமா செய்தார். இதை வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாகாலாந்து ஆளுநர் பொறுப்பை, மேகாலாயா ஆளு நரான கிருஷ்ணகாந்த் பாலிடம் கூடுதலாக அளித்துள்ளார்.
புதிய ஆளுநர் பட்டியல்
முந்தைய ஆட்சியில் பதவியில் அமர்த்தப்பட்ட ஆளுநர்களை மாற்றுவதென முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இந்தப் பட்டியலில் 10-க்கும் மேற்பட்ட ஆளுநர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் பதவிக்காலம் முடிந்த இருவரையும் சேர்த்து மொத்தம் 5 ஆளுநர் பதவிகள் காலியாக உள்ளன. மேற்கு வங்கத்தின் எம்.கே.நாராயணன், கோவாவின் பி.வி.வான்ச்சோ ஆகியோர் தங்கள் ஆளுநர் பதவியை எந்நேரமும் ராஜினாமா செய்யலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்கள் பட்டியலை உள்துறை அமைச்சகம் தயாரித்து பிரதமர் மோடியின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
உ.பி. ஆளுநராக ராம் நாயக்
இது குறித்து தி இந்துவிடம் உள்துறை அமைச்சக வட்டாரம் கூறுகையில், “மகாராஷ்டிராவைச் சேர்ந்தவரும், பெட்ரோலியத் துறை முன்னாள் அமைச்சருமான ராம் நாயக் உ.பி. ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்படுகிறார். உ.பி. சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் கேசரிநாத் திரிபாதி அசாம் மாநிலத்துக்கும், கேரள மாநிலம், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரிடம் தோல்வியடைந்த ஓ.ராஜகோபாலின் பெயர் கர்நாட காவுக்கும் பரிந்துரைக்கப்பட் டுள்ளது” என்றது.
யஷ்வந்த் சின்ஹா மறுப்பு
டெல்லி பாஜக தலைவர் வி.கே.மல்ஹோத்ரா, லக்னோ தொகுதியை ராஜ்நாத்சிங்கிற்கு விட்டுக் கொடுத்த லால்ஜி தாண் டன், பஞ்சாப் பாஜக தலைவர் பல்ராம்தாஸ் தாண்டன், முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் புதிய ஆளுநர்களின் பட்டியலில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா அம்மாநில முதல்வர் ஆக விரும்புவதால், ஆளுநர் பதவியை மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT