Published : 24 Aug 2021 03:16 AM
Last Updated : 24 Aug 2021 03:16 AM

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் தேங்கும் கழிவுநீர்: பள்ளி திறக்கப்பட உள்ளதால் நிரந்தர தீர்வு காண கோரிக்கை

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவு வாயில் வழியாக ஓடும் கழிவுநீர். அடுத்த படம்: பள்ளி மைதானத்தில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசும் கழிவுநீர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே அக்ராவரம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் குளம் போல் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் கவுண்டன்யா ஆற்றின் கரையோரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, அருகில் உள்ள ஏரிப்பட்டரை, பூங்குளம், ரங்கசமுத்திரம், அக்ராவரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு கரோனா முதல் அலையின்போது பள்ளி மூடப்பட்டது.

இடையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக மட்டும் சில மாதங்கள் பள்ளி திறக்கப்பட்டது. இரண்டாம் அலை தொடங்கியதும் மீண்டும் பள்ளி மூடப்பட்டது.

இதற்கிடையில், அக்ராவரம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, அக்ராவரம் கிராமத்தின் கழிவுநீர் வெளியேறும் பகுதியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாய் பணி முழுமை பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அக்ராவரம் கிராமத்தின் மொத்த கழிவுநீரும் பள்ளியின் நுழைவு வாயில் வழியாகச் சென்று மைதானத்தில் குளம்போல் தேங்கியுள்ளது. தேங்கிய கழிவுநீரால் பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விரைவில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதற்கு முன்பாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் இன்று (24-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட் டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மணிமொழி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘பள்ளியில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றும் பணி இன்று மாலை (நேற்று) தொடங்கியுள்ளது. இதன் விவரம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

விரைவில் பணி தொடங்கும்

குடியாத்தம் வட்டார வளர்ச்சிஅலுவலர் (கி.ஊ) தயாளன் கூறும்போது, ‘‘பள்ளி மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மழை பெய்தால் மீண்டும் கழிவுநீர் வரும். எனவே, கழிவுநீர் மீண்டும் பள்ளிக்குள் வராமல் இருக்க ரூ.6.75 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு அருகில் உள்ள மற்றொரு கால்வாயுடன் இணைக்கும் திட்டத்தை தயாரித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் விரைவில் பணி தொடங்கும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x