Published : 23 Aug 2021 09:20 PM
Last Updated : 23 Aug 2021 09:20 PM
கரோனா பாதிப்பு புதுச்சேரியில் மிகக் குறைந்து நேற்று புதிதாக 42 பேருக்கு மட்டுமே உறுதியான நிலையில், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் புற நோயாளிகள் சிகிச்சை வழக்கம் போல் இன்று மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் புதிதாக கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைப் பரிசோதனை மூலம் கண்டறிவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று 3 ஆயிரத்து 35 பேருக்கு கரோனா பரிசோதனை நடந்து அதில் 42 பேருக்கு தொற்று இன்று உறுதியானது. தற்போது புதுச்சேரியில் 796 பேர் கரோனா தொற்றுடன் தற்போது உள்ளனர்.
இதுவரை கரோனா சிகிச்சைக்கான முதன்மை மருத்துவமனையாக விளங்கிய கதிர்காமத்தில் இள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் புற நோயாளிகளின் சிகிச்சை இன்று முதல் வழக்கம்போல் தொடங்கியுள்ளது.
இதுபற்றிச் சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் அருண் கூறுகையில், " மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் குறைந்து வரும் நிலையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து வசதிகளுடன் உள்ள கோரிமேடு அரசு மார்பக மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகள் ஆகியோரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. கரோனா சிகிச்சை முறைகளையும், கரோனா நோயாளிகளையும் கண்காணிக்க சிறப்பு மருத்துவக் குழுவினை புதுச்சேரி அரசு நியமித்துள்ளது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT