Published : 23 Aug 2021 08:44 PM
Last Updated : 23 Aug 2021 08:44 PM
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்தை இனி மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தேசிய சிறுபான்மையினர் அணித் தலைவர் ஜமால் சித்திக் தெரிவித்தார்.
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் சிறுபான்மையினர் அணி செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினர் அணித் தலைவர் விக்டர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், தேசிய சிறுபான்மையினர் அணித் தலைவர் ஜமால் சித்திக், தேசிய சிறுபான்மையினர் அணிச் செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் சிறுபான்மையினர் அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறுபான்மையினர் அணி செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தேசியத் தலைவர் ஜமால் சித்திக் பேசுகையில், ''பிரதமர் மோடியின் அனைத்துத் திட்டங்களும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எவ்வித பாரபட்சமும் இல்லாமல் உள்ளன.
சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து, அரசியல் லாபம் அடையும் நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி அனைவருக்குமான கட்சி. இந்துத்துவா என்பது வாழ்வியல் நெறிமுறைகளைத் தெரிவிக்கக்கூடிய அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது.
குடும்ப உறுப்பினர்களுக்கும் குடும்பம் சார்ந்தவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்காமல் தேசத்தில் உள்ள அனைவருக்கும் சமமாகப் பதவி வாய்ப்பினை வழங்குவது பாரதிய ஜனதா கட்சிதான். காஷ்மீரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இன்று பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற எதிர்க்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரத்தை இனி மக்கள் ஏற்க மாட்டார்கள்.
பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் சிறுபான்மையினருக்கு 9 இடங்களையும் அசாமில் 8 இடங்களையும் கேரளாவில் 12 இடங்களையும் புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு இடங்களையும் வழங்கியது.
சிறுபான்மையின மக்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மையினர் மத்தியில் எழுச்சி ஏற்படும். தமிழ் பேசும் மாநிலங்களில் தாமரை மலரவே மலராது என எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில் புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது'' என்று ஜமால் சித்திக் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT