Last Updated : 23 Aug, 2021 06:44 PM

 

Published : 23 Aug 2021 06:44 PM
Last Updated : 23 Aug 2021 06:44 PM

தளர்வு அறிவித்தும் திருச்சியில் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை

திருச்சி பேலஸ் திரையரங்கில் வெளியான எம்ஜிஆர் திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள். | படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்.

திருச்சி

அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை.

கரோனா ஊரடங்கின் புதிய தளர்வுகளில் ஒன்றாக 50 சதவீதப் பார்வையாளர்களுடன் ஆக.23-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளித்து ஆக.21-ம் தேதி உத்தரவிட்டது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் தூய்மைப் பணிகளும், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், திருச்சி மாநகர் உட்பட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை. திருச்சி மாநகரில் பேலஸ் உட்பட ஒருசில திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டன. அவற்றில் திரையிடப்பட்ட பழைய திரைப்படங்களை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து பேலஸ் திரையரங்கு மேலாளர் ஜி.செங்குட்டுவன், 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் கூறுகையில், "செல்போன், கணினி ஆகியவற்றில் திரைப்படம் பார்ப்பதைவிட திரையரங்குகளில் ஆரவாரத்துடன் பார்ப்பதைத்தான் ரசிகர்கள் விரும்புவர். எனவே, திரையரங்குகள் திறக்கப்பட்டால் ரசிகர்களிடத்தில் வரவேற்பு நிச்சயம் இருக்கும். ஆனால், புதிய திரைப்படங்கள் இப்போது வெளிவராத நிலையில், அனைத்துப் படங்களையும் இணையதளங்களில் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். எனவே, திரையரங்கைத் திறந்தால் ரசிகர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால் பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

எங்கள் திரையரங்கு உட்பட ஓரிரு திரையரங்குகளில் பழைய படங்களைத் திரையிட்டுள்ளோம். அதே வேளையில், ஆக.26-ம் தேதி புதிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளதால் அன்றிலிருந்து திறக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது தினமும் 3 காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். மக்களிடத்தில் கரோனா பரவல் அச்சத்தைக் களையும் வகையில், முதல் இரு காட்சிகள் முடிந்த பின்னரும் தூய்மைப் பணியும், கடைசிக் காட்சி முடிந்த பிறகு மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

முன்னதாக, திரையரங்குக்கு வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், உடலின் வெப்பநிலையைக் கண்காணிக்கவும், கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினியும் தயார் நிலையில் வைத்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x