Published : 23 Aug 2021 05:34 PM
Last Updated : 23 Aug 2021 05:34 PM

கேந்திரிய வித்யாலயாவில் கல்விக் கட்டண வசூல் புகார்: மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

சு.வெங்கடேசன் எம்.பி.: கோப்புப் படம்.

புதுடெல்லி

கேந்திரிய வித்யாலயா, கல்விக் கட்டணத்தை நான்கு மாதத்துக்கு முன்பிருந்தே வசூலிப்பதாக, மத்திய அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று (ஆக. 23) எழுதிய கடிதம்:

"10-வது வகுப்புக்கான கல்வியாண்டு, பிப்ரவரி 2021-லேயே முடிந்துவிட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி, ஆகஸ்ட் 3, 2021-ல்தான் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர், 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் முடிக்கப்பட்டது.

ஆனால், 11-வது வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றரை மாதத்துக்கும் சேர்த்து ரூ.3,150 கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவனுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பில் சேராத காலத்தில் டியூஷன் கட்டணம் ரூ.1,200, வித்யாலயா விகாஸ் நிதி ரூ.1,500, கணினி கட்டணம் ரூ.300, கணினி அறிவியல் கட்டணம் ரூ.150 என வசூலிக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சில பெற்றோர் என்னைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளனர்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்: கோப்புப்படம்

வகுப்புகள், கல்வி நடவடிக்கைகள் எதுவுமே இல்லாத காலத்துக்குக் கட்டணம் என்பது முறையல்ல. பெற்றோரின் புகார் முற்றிலும் நியாயமானது. ஆகவே, இதில் தலையிட்டு வசூலித்த கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும், இல்லாவிடில் எதிர்காலக் கட்டணத்தில் நேர் செய்ய வேண்டும்".

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x