Published : 23 Aug 2021 03:00 PM
Last Updated : 23 Aug 2021 03:00 PM
புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் 26ஆம் தேதி மாலை பட்ஜெட் தாக்கலாகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். பட்ஜெட் போடும் முன்பாக ஒப்புதல் மத்திய அரசிடமிருந்து வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுவை சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்ததால் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அப்போதைய காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததால் மத்திய அரசே நேரடியாகப் புதுவைக்குரிய 5 மாத இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. நடப்பாண்டுக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ரூ.10 ஆயிரத்து 100 கோடிக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியிடம் பட்ஜெட் தொடர்பாகக் கேட்டதற்கு, "பட்ஜெட் போடும் முன்பு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வந்துவிடும். வரும் 26ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளோம். 26ஆம் தேதி காலை ஆளுநர் உரை, அதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் தேர்தல் 11 மணிக்கு நடக்கும். மாலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளோம். எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவு எடுக்கும்" என்று குறிப்பிட்டார்.
பதவியேற்ற பின்னர் இதுவரை முதல்வர் ரங்கசாமி டெல்லிக்குச் செல்லவில்லை. 23ஆம் தேதி டெல்லி செல்வதாகத் தெரிவித்திருந்த அவர் செல்லவில்லை. எப்போது டெல்லி செல்ல உள்ளீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, "நான் டெல்லி செல்லும்போது உங்களிடம் முன்னதாகவே தெரிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டது பற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "தடுப்பூசியை ஞாயிறு மாலை செலுத்திக்கொண்டேன். உடல் நலம் நன்றாக உள்ளது. நான் இன்று காலை சீக்கிரமாகவே சட்டப்பேரவைக்கு வந்துவிட்டேன். அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தினேன். அனைவரும் தடுப்பூசி செலுத்துவது அவசியம்" என்று குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் மூன்றாவது அலை முன்னேற்பாடுகள் தொடர்பாகக் கேட்டதற்கு, "முன்னேற்பாடுகள் செய்துள்ளோம். நடவடிக்கை எடுத்து வருகிறோம். மூன்றாவது அலை வரக்கூடாது. கடவுளிடமும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT