Published : 23 Aug 2021 01:53 PM
Last Updated : 23 Aug 2021 01:53 PM
அறநிலையத்துறை சட்டப்படி கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாடுகளுக்காக அதன் நிலங்களை பயன்படுத்தக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள வையப்பமலை சுப்ரமணியசாமி கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் 10.64 ஹெக்டேர் நிலம் விவசாயம் அல்லது கோயிலுக்கு வருவாயை ஈட்டக்கூடிய கட்டுமானங்களை உருவாக்க பயன்படுத்தலாம் என, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கூறுகிறது.
ஆனால், கோயில் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக மாற்றிய வருவாய்த்துறை, அந்த நிலத்தை 81 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா போட்டு கொடுத்துள்ளது.
இதனை எதிர்த்து கோயில் சார்பில் பரம்பரை அறங்காவலர் தொடர்ந்துள்ள வழக்கில், கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தடையில்லா சான்று பெறாமல் பட்டா வழங்கக் கூடாது என, விதிகள் உள்ள நிலையில், அவற்றை புறந்தள்ளிவிட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோயில் விழா மற்றும் சடங்குகளுக்கு மட்டுமே தற்காலிகமாக பயன்படுத்தலாம் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் ஆக்கிரமிப்பாகத்தான் கருத வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (ஆக. 23) விசாரணைக்கு வந்தபோது, வட்டாட்சியர் தாக்கல் செய்த பதில் மனுவில், பட்டா வழங்கபட்ட இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும், அரசு நிலம் தான் பட்டா போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கோயிலின் நிலத்தை அதன் வருமானத்துக்கு வழிசெய்வதை தவிர பிற நோக்கத்துக்காக பயன்படுத்தவோ, வேறு யாருக்கு வழங்கவோ முடியாது என, அறநிலையத் துறை சட்டம் மற்றும் வருவாய் துறை நிலை விதிகள் உள்ளதால், அறநிலையத்துறை ஆணையரின் தடையில்லா சான்று இல்லாமல் பட்டா மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT