Published : 23 Aug 2021 12:56 PM
Last Updated : 23 Aug 2021 12:56 PM

கோடநாடு விவகாரம்; அதிமுகவுக்கு ஏன் பயம்? மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயார்: செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை: கோப்புப்படம்

சென்னை

கோடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு ஏன் பயம் என, செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 55-ன் கீழ் கோடநாடு விவகாரம் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோடநாடு விவகாரத்தைச் சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இன்று (ஆக. 23) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்க நீங்களாவது சட்டப்பேரவையில் குரல் கொடுங்கள் என அதிமுகவினர் என்னிடம் போனில் தெரிவிக்கின்றனர். கோடநாடு வழக்கில் 90 நாட்களில் பிணையில் வந்த மனோஜும், சயானும் புதுடெல்லியில் எதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்? எதற்காக ஒரு பத்திரிகையாளர் அதனை ஆவணப்படமாக எடுத்தார்? எதற்காக சென்னை காவல்துறை புதுடெல்லி விரைந்தது? எதற்காக அவரைக் கைது செய்தது? எதற்காக அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல் அதிமுகவினர் இருக்கின்றனர். நாங்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விதி எண்: 55-ன் கீழ் கொடுக்கிறோம். இதை விவாதிக்க வேண்டும். விவாதிக்க முடியவில்லையென்றால் அதனைச் சொல்ல வேண்டும். எதற்காகத் தேவை இல்லாததைப் பேச வேண்டும்? எதற்கு இந்த பயம்?

தைரியம் இருந்தால், இதுகுறித்து விவாதிக்கத் தயார் என்று அதிமுக சொல்ல வேண்டியதுதானே? அதை விடுத்து, பத்திரிகையாளரைச் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் இது தேவையில்லாதது எனச் சொல்ல என்ன காரணம்? உண்மை ஒரு நாள் வெளியில் வரும். ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கிறதென்றால், என்ன நடந்தது என்பதை வெளியில் கொண்டுவருவார்.

ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள், இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என விரும்புகின்றனர். ஒரு வாதத்தை வாதமாகப் பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் இதனை விவாதிக்க அதிமுக தயங்கினால், இதுகுறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. அவர்களை நாங்கள் விவாதத்துக்கு அழைக்கிறோம்.

ஜெயலலிதாவுக்கு நிச்சயம் இந்த ஆட்சி நீதி வழங்கும். சரியான பாதையில் விசாரணை சென்று கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் என்றால் அதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரலாம். அதிமுக எதற்கு அச்சப்படுகிறது என்பதுதான் கேள்வி".

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x