Published : 23 Aug 2021 12:12 PM
Last Updated : 23 Aug 2021 12:12 PM
கருணாநிதி, அன்பழகன் இடத்தில் துரைமுருகன் இருப்பதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 23) நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக, அத்துறை அமைச்சர் துரைமுருகனுக்குப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
"முதல் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு நீர்வளத்துறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் துறை சார்பாக முதன்முதலில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவது மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது. அதற்காக, துரைமுருகனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்தச் சட்டப்பேரவைக்கு அரை நூற்றாண்டுக்கு முன் வந்தவர்தான் துரைமுருகன். 50 ஆண்டுகளாக இந்த அவை நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார். இந்த அவையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் முக்கிய, மூத்த உறுப்பினர்தான் அவர்.
கருணாநிதி, க.அன்பழகன் மறைவுக்குப் பிறகு, மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு, எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்தான் துரைமுருகன். இளம் வயதுச் சிறுவனாக நான் ஸ்டாலினைப் பார்த்திருக்கிறேன் என, பல மேடைகளில் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வேலூர் பொதுக்கூட்டத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். 'என்னை இளைஞனாகப் பார்க்கிறேன் என, துரைமுருகன் சொல்வார். நான் அவரை கருணாநிதி, அன்பழகன் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன், அதுதான் உண்மை' எனச் சொன்னேன்.
எதுவாக இருந்தாலும் மனதில் எதனையும் வைத்துக்கொள்ள மாட்டார். மனதில் பட்டதை எடுத்துச் சொல்லி கட்சிக்கும் ஆட்சிக்கும் உறுதுணையாக இருப்பவர். கே.வி.குப்பம் அவர் ஊரின் பெயர். கீழ்வழித் துணையான் குப்பம் என்பது பெயர். அப்படி, எனக்கு வழித்துணையாக இருப்பவர் அவர். அப்படித்தான் கருணாநிதிக்கும் வழித்துணையாக இருந்தார்.
கருணாநிதி அவரை, 'துரை, துரை' என்று அழைப்பார். அவரிடம் இனிமையாகப் பேசுவார், பழகுவார். பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். எங்களுக்கெல்லாம் பொறாமையாக இருக்கும். தலைவர் இவரிடம் மட்டும் இவ்வளவு சகஜமாகப் பேசுகிறாரே என நாங்கள் நினைப்பது உண்டு.
துரைமுருகன், தலைவர் வீட்டுக்கு வரவில்லையென்றால் உடனே போன் போடச் சொல்வார். 2007-ல் துரைமுருகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, தலைவரின் உள்ளம் எந்த அளவுக்குத் துடித்தது என்று பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.
அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் இரவு துரைமுருகனுக்கு போன் செய்து, 'என்ன துரை தூங்கிட்டியா?' என்று கேட்டார். 'இல்லை, இன்னும் தூங்கவில்லை' என்று கூறினார். 'காலையில் அறுவை சிகிச்சையை நினைத்து பயப்படுகிறாயா?' எனக் கேட்டார். 'இல்லை' என்று அவர் சமாளித்தார். 'உன்னைப் பற்றித் தெரியும்' எனக் கூறி நேரே மருத்துவமனைக்கு கருணாநிதி சென்று, இரவு முழுக்க அங்கேயே இருந்து காலையில்தான் வீடு திரும்பினார்.
'ஒரு தாய் வயிறு தாங்கா காரணத்தால், தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்' என்று அண்ணா சொன்னதை இச்சம்பவம் வெளிப்படுத்தியது. கருணாநிதியின் பக்கத்தில் அல்ல, அவருடைய இதயத்திலேயே ஆசனம் போட்டு, அமர்ந்திருந்தவர் துரைமுருகன். அத்தகைய இடம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது.
1971-ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதே தொகுதியில் 8 முறை, ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறை என, இந்த அவையில் ஆழமான கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். இது யாருக்கும் கிடைக்காத பெருமை. எந்தத் துறையைக் கொடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பார்.
இப்போது சொல்லச்சொன்னால் கூட தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளின் பெயர்களையும் வேகமாகச் சொல்வார். காவிரி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் தன் மனதில் சேகரித்து வைத்திருப்பவர். இந்தக் கூட்டத்தை அழ வைக்க வேண்டும் என்று நினைத்தால் அழவைத்துவிடுவார். அதேநேரத்தில் சிரிக்க வைக்கவும், உணர்ச்சிவயப்படுத்தவும் வைப்பார். அமைதியாக இருங்கள் என்றால் அதையும் கேட்பார்.
நீர்வளத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றது பெருமை. முன்னவராக இருப்பது அவைக்குப் பெருமை. பொன்விழா நாயகனாக இருக்கிறார். எப்போதும் பொன்னைப் போல 'பளபள' வென்று சட்டை போட்டிருப்பார். புன்னகையும் எப்போதும் அவரிடம் இருக்கும்.
அவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். பல்வேறு துறைகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார். அவையின் மாண்பைக் காப்பதில் நல்ல வழிகாட்டியாகச் செயல்படுகிறார்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT