Published : 23 Aug 2021 09:35 AM
Last Updated : 23 Aug 2021 09:35 AM
கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 55ன் கீழ் கோடநாடு விவகாரம் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு ஒன்றை ஓபிஎஸ் - ஈபிஎஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடநாடு விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (திங்கள்கிழமை) காலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்னவிருக்கிறது. மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை. எத்தனையோ பிரச்சினைகள் இருக்க கோடநாடு பிரச்சினை குறித்து ஏன் விவாதிக்க வேண்டும்.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து விவாதிப்பது சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் செயல். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதை சட்டப்பேரவையில் விவாதிக்கலாமா? நீதிமன்ற அதிகாரத்தை சட்டப்பேரவையோ, சட்டப்பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது.
கோடநாடு விஷயத்தில் அதிமுக பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. அதிமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்த, சங்கடங்களைக் கொடுக்கவே கோடநாடு விவகாரத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். ஒரு மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு மன உளைச்சலைக் கொடுக்க திமுக இவ்விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிக்கிறது" என்று கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. இதில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு, முதல்வர் ஸ்டாலின், ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் ஏன் பேசுகிறீர்கள்’ என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் அதிமுகவினர் விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறினர்.
இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், "கோடநாடு விவகாரத்தை அவையில் விவாதிப்பது உரிமை மீறல் என்பதாலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்கின்றனர்" என்று கூறினார்.
ஈபிஎஸ் ஆலோசனை:
கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது விதி எண் 55ன் கீழ் விவாதிக்க அனுமதி கோரி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். கவன ஈர்ப்பு தீர்மானம் மீது இன்றே விவாதம் நடத்தவும் அவர் வலியுறுத்திக் கோரியுள்ளார்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கலைவாணர் அரங்கில் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT