Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM

தாம்பரம் புதிய மாநகராட்சி ஆகிறது

தாம்பரம்

தமிழக தலைநகர் சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம்உயர்த்தப்பட உள்ளது. இதற்கானஅறிவிப்பு பேரவையில் நாளைவெளியாகும் என தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக சார்பில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 29 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம் நகராட்சியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை சட்டப்பேரவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகராட்சிகளாக தரம் உயரும் பேரூராட்சிகளின் பட்டியல்: காஞ்சிபுரம் மாவட்டம் - மாங்காடு, குன்றத்தூர்; செங்கல்பட்டு மாவட்டம் - நந்திரவம், கூடுவாஞ்சேரி; திருவள்ளூர் மாவட்டம் - பொன்னேரி, திருநின்றவூர்; கரூர் மாவட்டம் - புஞ்சை புகளூர், டின்.பி.எல். புகளூர்; ராணிப்பேட்டை மாவட்டம் - சோளிங்கர்; சேலம் மாவட்டம் - இடங்கனசாலை, தாரமங்கலம்; திருப்பூர் மாவட்டம் - திருமுருகன்பூண்டி; கோயம்புத்தூர் மாவட்டம் - கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை;

விழுப்புரம் மாவட்டம் - கோட்டகுப்பம்; கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர்; தஞ்சாவூர் மாவட்டம் - அதிராம்பட்டினம்; திருநெல்வேலி மாவட்டம் - சுரண்டை, களக்காடு; சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை; தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர்; கன்னியாகுமரி மாவட்டம் - கொல்லன்கோடு; புதுக்கோட்டை மாவட்டம் - ஆலங்குடி, இலுப்பூர், பென்னமராவதி; கடலூர் மாவட்டம் - திட்டக்குடி, பெண்ணாடம், வடலூர் போன்ற பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.

அதேபோல் தாம்பரம் நகராட்சி அருகில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளையும், திருநீர்மலை, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம் ஆகிய பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் தாம்பரம், பல்லாவரம் அருகே உள்ள 15 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி அமைப்பு தரம் உயர்த்தப்படுவதால் சமச்சீரான வளர்ச்சியைப் பெறும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதிமுக, திமுக கட்சியினரிடையே இதற்கு பெரிய வரவேற்பு இல்லை.

காரணம் தலைவர்கள், கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், தங்களுக்கு பதவி கிடைக்காது என்பதால் தரம் உயர்வதை அவர்கள் விரும்பவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x