Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM
வறட்சிப் பகுதியான திருப் பாலைக்குடி காந்திநகரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் தனது சொந்த செலவில் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களை வளர்த்து சோலைவனமாக மாற்றியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி காந்திநகர் கடற்கரை கிராமமாகும். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு 1937 முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி சுற்றுச்சுவர் இன்றி ஆடு, மாடுகள் உலாவும் இடமாகவும், வகுப்பறைகள் சேதமடைந்த நிலையிலும் இருந்தது. 2014-ம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற எஸ்.ராஜூ பள்ளியை சீரமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்.
முதல் கட்டமாக பள்ளியை சுற்றியுள்ள காலியிடங்களை சமதளமாக்கினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ல் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கினார்.
இப்பகுதியில் எங்கு தோண் டினாலும் உப்பு தண்ணீராக இருப்பதால், வறட்சி காரணமாக மரக்கன்றுகளை வளர்க்க சிரமப்பட்டார். எனினும் விடாமுயற்சியுடன் டிராக்டர் டேங்கர்கள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மரக்கன்றுகளை வளர்த்துள்ளார். தொடர்ந்து தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் மரக்கன்றுகள் நட்டு, தற்போது பள்ளியை சோலைவனமாக மாற்றியுள்ளார். இங்கு தற்போது ஆலமரம், அரசமரம், புங்கன், வேம்பு என 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து குறுங்காடு போல் காட்சியளிக்கிறது.
பள்ளி வளாகம் முழுவதும் அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப் படங்கள் வரையப்பட்டு, அவர்களின் பொன்மொழிகள் எழுதப்பட்டுள் ளன.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான மணிகண்டன் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் அளித்த நன்கொடையால் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியரின் இம்முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளில் படித்த தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ராஜூ கூறியதாவது:
பள்ளியில் தற்போது 224 மாணவ, மாணவிகள் பயில் கின்றனர். இந்த ஆண்டு மட் டும் 35 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெட்டவெளியாக கிடந்த பள்ளி வளாகத்தை சோலைவனமாக மாற்றப்பட்டுள்ளது. 2019-ல் கடும் வறட்சி ஏற்பட்டபோது மரங்களை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றினேன்.பள்ளியை மேம்படுத்த இங்குள்ள ஆசிரியைகளும் முழு ஒத்துழைப்புத் தருகின்றனர்.பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், முழுமையான சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி ஆகியவை ஏற்படுத்தித் தந்தால் மாணவர்களுக்கு மேலும் வசதியாக இருக்கும் என்று கூறி னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT