Published : 22 Aug 2021 03:50 PM
Last Updated : 22 Aug 2021 03:50 PM
50 சதவீதப் பார்வையாளர்களுடன் இன்று திறக்கப்படும் நிலையில், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை எனத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. 250 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கரோனா 2-ம் அலைப் பரவலால் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி முதல் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. அதற்கு பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் திரையரங்குகளுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு நாளை (திங்கட்கிழமை) திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 50 சதவீதப் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், திரையரங்கப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், ’இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
’’தமிழகத்தில் 1,100 திரையரங்குகள் உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 168 திரையரங்குகள் உள்ளன. தற்போது கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளைச் செயல்படுத்தவுள்ளோம்.
திரையரங்கப் பணியாளர்களுக்கு ஏற்கெனவே நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவிட்டோம். அரசின் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், தனியார் மருத்துவமனைகளில் எங்களது செலவிலும் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. தடுப்பூசி செலுத்திய பணியாளர்கள் அனைவரும் 'நான் தடுப்பூசி செலுத்தி விட்டேன்' என்பதை அறிவிக்கும் விதமாக 'பேட்ச்' ஒன்றை அணிந்துகொள்ளும் வகையில் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவுள்ளோம். அப்போது திரையரங்குக்கு வரும் மக்களுக்கு நம்பிக்கை வரும்.
தற்போதைய சூழலில் தமிழில் ’அரண்மனை - 3’, ’சிவக்குமார் சபதம்’, ’லாபம்’ உள்ளிட்ட திரைப்படங்களும், இந்தி நடிகர் அக்சய்குமார் நடித்த ’பெல் பாட்டம்’, ’கான்ஜுரிங் - 3’ உள்ளிட்ட சில திரைப்படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. மேலும் அடுத்தடுத்து சில திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன.
சமூகத்தில் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது திரும்பிக் கொண்டிருக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஓட்டல்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படத் தொடங்கி விட்டன. இதனால் பொதுமக்களும் திரையரங்குகளுக்கு இயல்பாக வரத் தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
வாரத்தில் சனி, ஞாயிறு தவிர்த்து பிற நாட்களில் திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் வழக்கம்போல் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கும்போது, திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும். 2 வாரங்களில் அத்தகைய நிலை ஏற்படும் என நம்புகிறோம். அதற்காக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை. ஏற்கெனவே இருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கரோனா தொற்று மேலும் குறையும்போது விரைவில் 100 சதவீதப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’.
இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT