Published : 03 Feb 2016 10:46 AM
Last Updated : 03 Feb 2016 10:46 AM

பயறு சாகுபடியில் முதலிடம் வகித்தும் இந்தியாவில் தட்டுப்பாடு: ஹெக்டேருக்கு 1,000 கிலோ உற்பத்திக்கு வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இலக்கு

பயறு வகை (பருப்பு) சாகுபடியில் இந்தியா முதலிடம் வகித்தும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது உற்பத்தித் திறன் குறைவால் உள்ளூரில் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதை சமாளிக்க நாடு முழுவதும் சராசரியாக ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ பயறு உற்பத்தி செய்ய இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பயறு வகைகளில் உளுந்து, துவரை, பாசிப் பயிறு, தட்டைப் பயிறு, கொள்ளு, கொண்டக் கடலை உள்ளிட்டவை அன்றாட சமையலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சர்வதேச அளவில் 26.28 மில்லி யன் ஹெக்டேரில் பயறு சாகுபடி செய்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. பயறு வகைகள் அதிக அளவு பயிரிடும் 14 மாநிலங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 51.79 லட்சம் ஹெக் டேரில் பயறு சாகுபடி செய்யப்படு கிறது. தமிழகத்தில் 7.8 லட்சம் ஹெக் டேரில் பயறு சாகுபடி செய்யப்படு கிறது.

ஒரு நாளைக்கு ஒரு நபர் சராசரி யாக 60 கிராம் பயறு வகைகளை உட்கொள்ள வேண்டும். 1950-ம் ஆண்டு ஒரு நபருக்கு 40 கிராமாக கிடைத்த பயறு, தற்போது 35 கிராமாகக் குறைந்து விட்டது. கடந்த 2013-14ம் ஆண்டில் இந்தியாவில் 19.78 மில்லியன் டன் பயறு உற்பத்தி செய்யப்பட்டது. வறட்சியால் கடந்த 2014-15ல் 17.38 மில்லியன் டன்களா கக் குறைந்ததால், நாடு முழுவதும் பயறு வகைகள் விலை வரலாறு காணாத வகையில் பல மடங்கு உயர்ந்தது.

அதனால், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் பயறு சாகுபடி யையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க நாடு முழுவதும் பயறு பெருக்குத் திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் பயறு வகைகளை சாகுபடி செய்தால், மாவட்ட வேளாண்மை அறிவியல் மையங்கள் மூலம் ஹெக்டேருக்கு ரூ.7,500 மானிய உதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதற் கான ஆய்வுக்கூட்டம், மதுரை தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் கடந்த வாரம் நடைபெற் றது. இந்தக் கூட்டத்தில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விரிவாக்கக் கல்வி இயக்குநர் பிலிப், கர்நாடக மாநிலம் பெங்க ளூரு வேளாண்மை தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி பி.டி.ராயுடு தலைமை யில், தமிழகம் முழுவதும் இருந்து 18 வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் கூடி 2 நாட்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பயறு வகை களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது, விவசாயிகளிடம் நவீன தொழில்நுட்பத்தில் கூடுதல் உற்பத்தி திறனுள்ள புதிய ரகங்களை சாகுபடி செய்ய வைப்பது குறித்து ஆலோசித்தனர்.

இதுகுறித்து வேளாண் அறிவியல் மைய வல்லுநர் உதயகுமார் கூறியதாவது: பயறு சாகுபடியில் இந்தியா முன்னிலை வகித்தாலும், மற்ற நாடுகளை ஒப்பிடும்போது உற்பத்தித் திறன் குறைவாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் உள்ளூரில் தட்டுப்பாடு நீடிக்கிறது. இதைச் சமாளிக்க பர்மா, ஆஸ்திரேலியாவில் இருந்து பயறு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த 2014-15-ம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக ஹெக்டேருக்கு 743 கிலோ பயறு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தி திறனை ஆயிரம் கிலோவாக அதிகரிக்க தற்போது முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. நிலத்தில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் பாசிப் பயறு, உளுந்து, துவரை பயிரிட விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் நெல் வரப்புகளில் பயறு வகைகளை பயிரிட்டனர். தற்போது அதுபோல பயிரிடுவதில்லை. உற்பத்தி குறை வுக்கு இதுவும் ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய சராசரி ஹெக்டேருக்கு 694 கிலோ

உதயகுமார் மேலும் கூறியதாவது: “மத்தியப்பிரதேசத்தில் ஹெக்டேருக்கு 803 கிலோ பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஹெக்டேருக்கு 512 கிலோவே உற்பத்தியாகிறது. மாநிலத்துக்கு மாநிலம், இந்த உற்பத்தித் திறன் வேறுபடுவதால் சாகுபடி பரப்பு அதிகமாக இருந்தாலும், இந்தியாவின் மொத்த பயறு உற்பத்தி திறன் சராசரியாக ஹெக்டேருக்கு 694 கிலோ என்ற அளவிலேயே இருக்கிறது. பர்மாவில் ஹெக்டேருக்கு 1,312 கிலோவும், கனடாவில் 1,914 கிலோவும், அமெரிக்காவில் 1,776 கிலோவும், சீனாவில் 1,533 கிலோவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

விவசாயிகள் பயிர் இடைவெளியை பராமரிக்காமல் சாகுபடி செய்வது, உர மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் பழைய முறையிலேயே சாகுபடி செய்வது உற்பத்தித் திறன் குறைவுக்கு முக்கியக் காரணம். “புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுப்பது, அதை செயல்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் தயக்கத்தை கண்டறிந்து நீக்குவது, புதிய தொழில் நுட்பங்கள் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது” ஆகியவையே பயறு பெருக்குத் திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x