Published : 21 Aug 2021 07:07 PM
Last Updated : 21 Aug 2021 07:07 PM

ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்; எதற்கெல்லாம் அனுமதி?- முழு விவரம்

ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயங்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன்‌ முடிவடையும்‌ நிலையில்‌, மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று (21.08.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்வர்‌ தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் செயல்பட செப்டம்பர் 1 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்கவும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடவும் பூங்காக்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயங்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 21) வெளியிட்ட அறிவிப்பு:

’’· இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

· தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

· நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

· நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

· அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

· தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

· தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2, FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x