Published : 21 Aug 2021 06:54 PM
Last Updated : 21 Aug 2021 06:54 PM
தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 21) வெளியிட்ட அறிவிப்பு:
"தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள், தற்போதுள்ள நோய்த்தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. மேலும், மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கோவிட் - 19 நோய் பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடு 06.09.2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
முன்பே அறிவித்தவாறு, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23-8-2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
* கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி / மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT