Published : 26 Jun 2014 12:00 AM
Last Updated : 26 Jun 2014 12:00 AM

ஆற்றில் பழங்கால நாணயம் தேடும் விவசாயத் தொழிலாளர்கள்- நாணயம் சேகரிப்போர், ஆராய்ச்சி மாணவர்களின் ‘பொக்கிஷங்கள்’

ஸ்ரீரங்கம் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மணலில் புதைந் துள்ள பழங்கால நாணயங்களை தேடும் பணியில், தஞ்சாவூர் மாவட்டம் திட்டை அருகேயுள்ள மெலட்டூரைச் சேர்ந்த கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்களான இவர்கள் குறுவை சாகுபடி முடிந்து விட்டதால், அறுவடைக்கு இடைப்பட்ட நாட்களில் பிழைப்புக்காக ஆற்று மணலில் புதைந்துள்ள நாணயங்கள், தங்கம், வெள்ளிப் பொருட்களைச் சேகரித்து, விற்று வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் ஆற்று மணலை அரித்துப் பொருட்களை எடுக்கும் இவர்களை, நாணயம் சேகரித்து விற்பவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தேடிவருகின்றனர். 5 குடும்பங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காலை முதல் மாலை வரை சலியாது ஆற்றில் மணலை கைகளால் சலித்துப் பார்த்தவண்ணம் உள்ளனர்.

இங்கு கிடைக்கும் பழங்கால நாணயங்கள் மற்றும் அதன் மதிப்பு குறித்து இவர்களுக்கு ஏதும் தெரிவதில்லை. நாணயத்தை வாங்க வருவோரிடம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்று விடுகின்றனர். நாணயங்களைத் தேடும்போது குன்றிமணி தங்கம் ஏதாவது கிடைத்தால் இவர்கள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

விவசாய வேலையில்லாததால்..

பொறுமையாக மணலைக் கிளறிக் கொண்டிருந்த ராஜேந்திரனிடம் பேசியபோது அவர் கூறியது:

பழைய காசு பத்தின விவர மெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு வருமானம் வந்தால் சரி. விவசாய வேலை இல்லாதபோதுதான் இந்த நாடோடி பிழைப்பு. அறுவடைக்கு முன்னாடி ஊர் திரும்பிடுவோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை செப்புக் காசு, தங்கக் காசுகளை எல்லாம் எடைக்குதான் கொடுத்தோம். அதை அவர்கள் உருக்கி விடுவதாக சொல்வார்கள். தற்போது அப்படியில்லை. பழங்கால பொருட்கள் மற்றும் நாணயங்கள் சேகரிப்போர், மாணவர்கள் என பலர் எங்களைத் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். அதை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. எங்களுக்கு ஒரு நாள் பிழைப்பு அவ்வளவுதான் என்றார்.

பழங்கால நாணயம் கிடைப்பதில் வியப்பில்லை…

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகத்தின் நிறுவனர் ‘பழங்காசு’ சீனிவாசன் கூறுகையில், “சங்க காலத்தில் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சிபுரிந்தனர். 14, 15-ம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்கள் சிராப்பள்ளியை 2-வது தலைநகரமாக அறிவித்து ஆட்சி செய்துள்ளனர். தொடர்ந்து வந்த ஆற்காடு நவாப் ஆட்சிக் காலம் வரை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப்படுகை (ராஜபாட்டை) அரச பெருவழியாக இருந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாணிபம் நடந்துள்ளது. மேலும் யாத்ரிகர்கள் வந்து செல்லும் பாதையாகவும் பயன்பட்டுள்ளது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பல போர்களைச் சந்தித்த இப்பகுதி ஆற்றுப் படுகையில் பழங்கால நாணயங்கள் கிடைப்பதில் ஒன்றும் வியப்பில்லை.

இப்படி கிடைக்கும் பழங்கால நாணயம் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷம். எனவே, மணலில் புதைந்து கிடக்கும் அவற்றை அரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கிடைக்கும் நாணயங்கள் எடைக்கு போட்டு உருக்கும் நபர்கள் கையில் கிடைக்காமல் எங்களைப் போன்று நாணயம் சேகரிக்கும் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் கையில் கிடைக்குமாறு வழிசெய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளேன்” என்றார்.

இந்த விவசாயத் தொழிலாளர்கள், நாணய சேகரிப்பில் ஆர்வமுள்ளோர் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் என்றுதான் கூற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x