Published : 21 Aug 2021 05:34 PM
Last Updated : 21 Aug 2021 05:34 PM
வருகின்ற 26-ம் தேதி பேரவைத் துணைத் தலைவர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று (ஆக.21) சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரி சட்டப்பேரவைத் துணைத் தலைவர் தேர்வுக்கான தேர்தலில், போட்டியிட விரும்பும் எம்எல்ஏக்கள் இன்று முதல் வரும் 25-ம் தேதி பிற்பகல் 12 மணிக்குள், விதிமுறைகளின் கீழ் சட்டப்பேரவைச் செயலரிடம் வேட்பு மனுக்களை வழங்கலாம்.
எந்த ஒரு எம்எல்ஏவும் முன்மொழிபவர் என்ற முறையில் அவரும், வழிமொழிபவர் என்ற முறையில் மற்றொரு எம்எல்ஏவும் கையெழுத்திட்டு, பேரவைத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். வரும் 25-ம் தேதி பிற்பகல் 12 மணியோடு வேட்பு மனுக்கள் பெறும் காலம் முடிவுபெறும்.
இதனையடுத்து, ஆக.26-ம் தேதி காலை 11.30 மணிக்கு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்யாமல் போட்டியில்லை எனில், ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டு அன்றைய தினமே பேரவைத் துணைத் தலைவர் பதவி ஏற்பு நடைபெறும். முன்னதாக, ஆக.26-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் காலை 9.30 மணிக்குத் துணைநிலை ஆளுநர் உரையாற்றுவார்.
அரசு கொறடா, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் ஆகிய பதவிகள் நிரப்புவது குறித்து முதல்வர் ரங்கசாமி அறிவிப்பார். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான திட்டம் தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தோம். அதில் சில விளக்கங்கள் கேட்டதால், அதற்குரிய பதிலையும் அளித்து ஆக.19-ம் தேதி மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளோம். மத்திய அரசின் முழு மானியத்துடன் புதிய சட்டப்பேரவை வளாகத்தைக் கட்டுவதற்குக் கோரியுள்ளோம். இதற்காக செப்.9-ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம். மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும். முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளார். எனவே புதுச்சேரி மக்களுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்’’.
இவ்வாறு செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், ஆக.26-ம் தேதி புதுச்சேரியின் 15-வது சட்டப் பேரவையின், பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியை நிர்ணயித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதியின் கீழ் நியமனச் சீட்டுகள் வரும் ஆக.25-ம் தேதி பிற்பகல் 12 மணி வரை, பேரவைச் செயலர் மூலம் பெற்றுக் கொள்ளப்படும். நியமனச் சீட்டுகளைப் பேரவைச் செயலரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமனச் சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு அந்தந்த உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT