Published : 21 Aug 2021 05:23 PM
Last Updated : 21 Aug 2021 05:23 PM
சட்டத்திற்குப் புறம்பான திட்டங்களுக்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விசாரணை மேற்கொள்ளக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன்.குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கட்டுமான மற்றும் அமைப்பு சாராத் தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். எனவே, இணைய வழியில் பதிவு முறை எளிமையாக்கப்பட உள்ளது.
கட்டுமானத் தொழிலாளர்களின் வாரியத்தில் உள்ள நிதியை வேறு அமைப்பிற்கு மாற்றக் கூடாது என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்தில் சொல்லப்படாத சில திட்டங்களுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சட்டத்திற்குப் புறம்பான செயல். இதனை ஆய்வு செய்வதற்குக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதல்வரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழில் சங்கங்களுக்குக் கட்டாயப் பதிவு முறை கொண்டு வரப்பட உள்ளது. இதில் பதிவு செய்தவர்கள் மட்டுமே வேலைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்பட உள்ளது. இதன் மூலம் அனைத்துத் தொழிலாளர்களையும் வாரியத்தின் கீழ் கொண்டு வரமுடியும்.
2011ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிற்சங்கத்தில் 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது செயலில் இருக்கும் உறுப்பினர்கள் 13 லட்சம் என்று கூறுகின்றனர். இதற்காகவும் விசாரணை கமிஷன் அமைக்கப்பட உள்ளது. தொழிலாளர்கள் வாரியத்தை எளிமை ஆக்குவதற்கு ஆவணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதத்தில் எந்த ஒரு கோரிக்கை மனுவும் நிலுவையில் இல்லை என்ற நிலையை உருவாக்கப் போகிறோம்’’.
இவ்வாறு பொன்.குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT