Published : 21 Aug 2021 04:48 PM
Last Updated : 21 Aug 2021 04:48 PM

மகள் குடும்பத்தை வெடி வைத்துக் கொல்ல முயற்சி: தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கொண்டநாயக்கன்பட்டி கிராமத்தில் நிலப் பிரச்சினை தொடர்பாக மகள் குடும்பத்தைக் கொலை செய்ய வீட்டுக்கு வெடிவைத்த வழக்கில் தந்தை உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்துள்ள கொண்டநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (60), விவசாயி. இவருக்கு மங்கை, வளர்மதி என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மங்கைக்கு நந்தினி (30), யுவராஜ் (28), கார்த்திக் (24) என்ற பிள்ளைகளும், இரண்டாவது மனைவி வளர்மதிக்கு அனிதா (27), அகிலா (24), அஜித் (23) என்ற பிள்ளைகளும் உள்ளனர்.

இதில், இரண்டாவது மனைவியின் மகள் அனிதாவை அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நரசிம்மன் (30) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மாமனார் ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நரசிம்மன் அவரிடம் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ராஜா தனக்குச் சொந்தமான நிலத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளி நபர்களுக்கு விற்றுள்ளார். அந்த நிலம் 2,3 பேரிடம் கைமாறிய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த நிலத்தை நரசிம்மன் வாங்கியுள்ளார். இதற்கு ராஜாவும் அவரது முதல் மனைவியின் மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நிலத்தைத் தங்கள் பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளனர். ஆனால், நரசிம்மன் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த ராஜாவும், அவரது மகன்கள் யுவராஜ், கார்த்திக் ஆகியோரும் நரசிம்மன் குடும்பத்தைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக ஜெலட்டின் (ஸ்லரி), டெட்டனேட்டர், மின் வயரை வாங்கியுள்ளனர். திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று இரவு மழை பெய்த நிலையில், ஜெலட்டின் வெடி வைத்து வீட்டைத் தகர்த்து அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, நரசிம்மன் வீட்டுக்கு இன்று (ஆக.21) அதிகாலை 3 மணியளவில் சென்ற யுவராஜ், கார்த்திக் ஆகியோர் ஜெலட்டினை வைத்துள்ளனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் உள்ள வராண்டாவில் உறங்கிக் கொண்டிருந்த நரசிம்மனின் தந்தை சேட்டு, ஆட்கள் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்துள்ளார். இதைக் கவனித்த யுவராஜ், கார்த்திக் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

நிலப்பிரச்சினையில் வெடி வைத்துத் தகர்க்க முயன்ற நரசிம்மனின் வீடு

அதிர்ச்சியில் சேட்டு கூச்சலிடவே உறக்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து வந்து பார்த்தபோது, ஜெலட்டின் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு மின் வயர் எடுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த மின் கம்பத்தில் இணைப்பு கொடுத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, மின் வயரைத் துண்டித்தவர்கள் கந்திலி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்த தகவலை அடுத்து திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

நரசிம்மன் கொடுத்த புகாரின் பேரில் ராஜா, யுவராஜ், கார்த்திக் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஜெலட்டின், டெட்டனேட்டர்களை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்று காவல்துறையினருடன் க்யூ பிரிவு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்துக் காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்தச் சம்பவத்தில் மின் இணைப்பைத் தவறாகக் கொடுத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உறக்கத்தில் இருந்த சேட்டு விழித்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

நிலப்பிரச்சினை காரணமாக மருமகன் வீட்டையே ஜெலட்டின் மூலம் வெடி வைத்துத் தகர்க்க முயன்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x