Published : 21 Aug 2021 11:33 AM
Last Updated : 21 Aug 2021 11:33 AM
திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை விரைவாக இயற்ற வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஆக. 21) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
"விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு பாமக வலியுறுத்தி வந்ததன் பயனாக, கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு!
ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன. தடை விலகிய 16 நாட்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம்!
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்ட முன்வரைவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!
இளைஞர் பச்சையப்பனின் தற்கொலை மற்றவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் எவரும் ஆன்லைன் சூதாட்டம் என்ற மாயவலையில் சிக்கி விடாமல் கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது!(1/5)#Suicide #OnlineGambling
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 21, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT