Last Updated : 21 Aug, 2021 07:00 AM

 

Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

சேலத்தில் புதியதாக 3 இடத்தில் இ-சேவை மையங்கள் திறக்க நடவடிக்கை

சேலம்

‘சேலத்தில் இ-சேவை மையம் மூலமாக அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் புதியதாக மூன்று இ-சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்ரேஷன் வட்டாட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருந்து, பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி, அவர்கள் கொண்டு வரும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, அவர்களுக்குத் தேவையான விண்ணப்பங்களை நகல் எடுத்து வழங்கி வருகிறார்.

பட்டா மாறுதல், முதியோர், ஆதரவற்றோர், ஊனமுற்றோர் விண்ணப்பம், சாதிச் சான்றிதழ், திருமண நிதி உதவி திட்ட விண்ணப்பம், வருமான சான்றிதழ் என பல்வேறு சான்றிதழுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக இ-சேவை மையத்துக்கு வருகின்றனர். ஆனால், முதலில் வரும் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கான பணி மட்டுமே மேற்கொள்வதால் பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.

மேலும், இ-சேவை மையத்துக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அவர்கள் அமர்வதற்குத் தேவையான நாற்காலி வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற இடர்பாடுகளை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக இ-சேவை மையங்களை திறக்க வேண்டும் என்றும், சர்வர், நெட்-வொர்க் குறைபாடுகளை சீர் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் கேபிள் டிவி கார்ப்ரேஷன் வட்டாட்சியர் பிரகாஷ் கூறும்போது, ‘சேலத்தில் இ-சேவை மையம் மூலமாக அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், புதியதாக மூன்று இ-சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாநகராட்சி அலுவலகம், பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் மற்றும் கால்நடை மருத்துவத் துறை அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் புதியதாக இ-சேவை மையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைந்து இந்த மூன்று இ-சேவை மையங்களும் திறக்கப்படும். இதனால், பொதுமக்கள் காலவிரயமின்றி உடனுக்குடன் அவர்களுக்குத் தேவையான பணிகளை முடித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x