Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM
உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே திடீரென ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிவடைந்தது. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றிப்பெற என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பணிகள் ஒதுக்கீடு உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பத்தூர் மாவட் டம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய திமுக சார்பில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பெரியகம்மி யம்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் உமாகன்ரங்கம் தலைமை வகித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட பொறுப் பாளரும், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான தேவராஜி முன்னிலை வகித்தார். தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் ஜோலார் பேட்டை மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 ஊராட்சிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் குறைவான அளவில் பங்கேற்றனர்.
இதைக்கண்ட மாவட்ட பொறுப்பாளர் தேவராஜி ஆவேசமடைந்து, ஒன்றிய பொறுப்பாளரான உமாகன் ரங்கனிடம், ‘தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் என்பதால் அனைத்து நிர்வாகிகளையும் ஏன் அழைக்கவில்லை ? பலர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையே? ஏன் அனைவரையும் அழைத்து வரவில்லை? குறைவான நிர்வாகிகளை கொண்டு எப்படி கூட்டத்தை நடத்துவது ? தேர்தலில் வெற்றிப்பெறுவது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
இதற்கான பதிலை ஒன்றிய பொறுப்பாளர் உமாகன்ரங்கம் கூறியதை ஏற்காமல், மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் கட்சியி னர் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர் உமாகன்ரங்கனை, தகாத வார்த்தைகளால் திட்டியதாககூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த ஒன்றிய பொறுப்பாளர் உமாகன்ரங்கன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என கூச்சலிட்டனர். இதனால், கூட்டம் தடைபட்டது.
அப்போது, தேவராஜி ஆதரவாளர்களுக்கும், ஒன்றிய பொறுப்பாளர் உமாகன்ரங்கன் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால், ஆலோசனைக்கூட்டம் நடந்த திருமண மண்டபம் சலசலப்பானது.
இதைக்கண்ட தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்தார். ஆனால், பிரச்சினை பெரிதானதே தவிர முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால், கூட்டத்தை பாதியில் முடித்த மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் மண்டபத்தில் இருந்துவெளியேறினார். அவரை தொடர்ந்து, தி.மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையும் வெளியேறினார்.
இதையடுத்து, ஆலோசனைக் கூட்டம் பாதியில் முடிவடைந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். திமுகவின் உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மூத்த நிர்வாகி களிடம் ஏற்பட்ட தகராறினால் அடிதடியில் முடிவடைந்தும், கூட்டம் பாதியில் முடிவடைந்த சம்பவமும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘எதிர்பார்த்த அளவுக்கு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் சில கசப்பான சம்பவம் நடந்துவிட்டது. அரசியல் கட்சிக்கூட்டம் என்றால் சில தகராறுகள், சண்டைகள், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதைப்பற்றி எல்லாம் வெளியே சொல்லக் கூடாது’’ என்றனர்.
இக்கூட்டத்தில் ஜோலார் பேட்டை நகர பொறுப்பாளர் அன்பழகன், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கதிரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சிந்துஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT