Published : 20 Aug 2021 04:14 PM
Last Updated : 20 Aug 2021 04:14 PM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு, மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, 2018-ம் ஆண்டு, ஆலையைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான 2018, மே 22 அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, பேரணியாகச் சென்றனர்.
அப்போது நடைபெற்ற கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியின்போது, 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், முந்தைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. 2018 ஜூன் 4 அன்று விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசம், பின்னர் 6 மாத காலமாக நீட்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த மே 14 அன்று, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டித்து தமிழக அரசு இன்று (ஆக. 20) அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஆக.23-ம் தேதி முதல் 2022, பிப். 22-ம் தேதி வரை இந்த ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT