Published : 20 Aug 2021 11:03 AM
Last Updated : 20 Aug 2021 11:03 AM
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 30 ஆண்டு பழமையான வேப்பமரம் மறுநடவு செய்யப்பட்டது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவின் முன்புறம் 30 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது. அந்த இடத்தில் பொன் விழா நுழைவுவாயில் அமைக்கப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அந்த மரம் அகற்றப்பட வேண்டியிருந்தது. அந்த மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்க, 'பர்லாபிங்' என்ற முறையைப் பயன்படுத்தி, அந்த மரத்தை வேருடன் எடுத்து, வேறு இடத்தில் மறுநடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த மறுநடவு செய்யும் பணி நேற்று (ஆக.19) பல்கலைக்கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் கல்யாணசுந்தரம், தோட்டக் கலைக்கல்லூரி முதன்மையர் புகழேந்தி மற்றும் மலரியல் துறைத் தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் மரத்தின் சிறு கிளைகள் வெட்டப்பட்டு, தண்டில் இருந்து நீராவிப் போக்கு வெளியேறுவதைத் தடுக்க, மருந்துகள் வைத்து, அதன் மேல் வைக்கோல் வைத்து சணல் பைகளால் மூடி ஈரப்பதத்துடன் வெட்டுப் பகுதிகள் கட்டப்பட்டன.
பின்னர், ஆணி வேர் பாதிக்கப்படாமல், பக்கவாட்டு வேர்களை மட்டும் வெட்டி, மரத்தின் வேர்ப்பந்தோடு பெயர்த்து எடுக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவின் அருகில் உள்ள நுழைவுவாயிலின் மற்றொரு பகுதிகளில் வெற்றிகரமாக நடவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT