Published : 20 Aug 2021 10:23 AM
Last Updated : 20 Aug 2021 10:23 AM
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கிராமப்புறத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து, ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை பட்டதாரிப் பெண் ஒருவர் சம்பாதித்து சாதனை புரிந்து வருகிறார்.
தா.பழூர் அடுத்த கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு (34). எம்.எஸ்சி., பி.எட். முடித்துள்ள இவர், பிசினஸ் செய்து வரும் தீரன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு முன்பு வேலைக்குச் சென்ற அழகு, திருமணத்துக்குப் பிறகு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
வீட்டில் இருக்கும் நாம் ஏதாவது ஒரு கைத்தொழிலைச் செய்ய வேண்டும் என எண்ணிய அழகு, தா.பழுர் அடுத்த சோழமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் பயிற்சி மையத்தில் சேர்ந்து மண்புழு உரம் தயாரிக்கும் முறையைக் கற்றார்.
பின்னர், கணவரின் உதவியோடு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்க படுக்கை (பெட்), உரங்களை பாக்கெட் செய்ய சாக்குப் பைகள், தையல் போட இயந்திரம், மாட்டு எரு, மண் என, முக்கிய மூலப்பொருட்களை வாங்கிய அழகு, தனது வீட்டுத் தோட்டத்திலேயே மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளைக் கடந்த 2019 ஜூன் மாதம் தொடங்கினார்.
உரங்கள் உற்பத்தி செய்யத் தேவைப்படும் மண்புழுக்களை பெரம்பலூரில் உள்ள ஒரு மண்புழு உரம் உற்பத்தி செய்யும் பண்ணையில் வாங்கி வந்து, உரங்களைத் தயாரித்த அழகு, விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை நாடி அதன் இணையதளத்தில் மண்புழு உரத்தின் விவரத்தைப் பதிவு செய்தார்.
அன்று முதல் இன்று வரை அமேசான் மூலம் 1 கிலோ முதல் 10 கிலோ வரையிலான பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறார். மேலும், நேரடியாக வரும் விவசாயிகளுக்கும் 50 கிலோ வரையிலான மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து அழகு கூறுகையில், "முதன்முதலில் மண்புழு உரம் தயாரித்தபோது, விற்பனை செய்வதில் சற்று சுணக்கம் காணப்பட்டது. அப்போது, வேளாண் அறிவியல் மைய அலுவலர்கள், விவசாயிகள் பலரிடமும் மண்புழு உரங்கள் குறித்தும், தன்னிடம் இருப்பது குறித்தும் தெரியப்படுத்தினேன். அதன்பின், விவசாயிகள் பலரும் தங்களுக்குத் தேவையான உரங்களை வாங்கிச் செல்கின்றனர்.
மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு இந்த மண்புழு உரம் திடமான காய்கறிகளை நச்சுத்தன்மை இன்றித் தருகிறது. அதனால் மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்கள் பெரும்பாலும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ வாங்கினால் ரூ.15 எனவும், 25 கிலோவுக்கு மேல் வாங்கும் போது ரூ.12 எனவும் கொடுத்து வருகிறேன். தற்போது 4 ஆட்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு கூலி உட்பட அனைத்து செலவுகளும் போக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.
இது எனது குடும்பத்துக்குப் பெரும் உதவியாக உள்ளது. வேலைக்குச் செல்ல முடியாத பெண்கள் இதுபோன்ற சிறு சிறு கைத்தொழில்களைச் செய்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றி அடையலாம். நான் உற்பத்தி செய்யும் மண்புழு உரத்தைப் பெற அமேசானில் https://amzn.to/340Qs54p என்ற இணைப்பிலும், 9585340007 என்ற எனது செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், மண்புழு தயாரிப்பது குறித்து பயிற்சியைத் தரத் தயாராகவும் உள்ளேன்" என்றார்.
கிராமப்பகுதியில் இருந்து மண்புழு உற்பத்தி செய்து அமேசான் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து சாதனை படைத்து வரும் அழகுவைப் பலரும் பாராட்டி வருகின்றனர். கிராமப்புறத்தில் இது சாத்தியமா எனக் கூறியவர்கள், தற்போது வியந்து நிற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT